தமிழகம்

ஜெ. சொத்துகள் பறிமுதல் விவகாரம்: விடுப்பில் செல்லத் தயாராகும் அதிகாரிகள்? - வருவாய்த்துறை வட்டாரங்கள் தகவல்

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையாக விதிக் கப்பட்ட ரூ.100 கோடி அபராத தொகைக்காக, ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய உள்ள நிலையில் சொத்துகள் அதிகம் உள்ள பகுதிகளின் வருவாய்த்துறை அதிகாரிகள் விடுப்பில் செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தர விட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இதில் பெங்களூரு நீதி மன்றத்தின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனைக் காலம் முடிவதற்குள் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்த வேண்டி யுள்ளது. இதனால், மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்து அபராதத் தொகையைச் செலுத்த தமிழக அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தர விட்டது.

இதற்கான உத்தரவுக் கடிதங்களை காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சி மாவட்டத்தை பொருத்தவரை சிறுதாவூர் மற்றும் பையனூர் பங்களா மற்றும் செய்யூரில் உள்ள 25 ஏக்கர் புஞ்சை நிலம், வாலாஜாபாத் வட்டம் ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள 100 ஏக் கருக்கும் மேற்பட்ட புஞ்சை நிலம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக எந்தவிமான உத்தரவுகளும் தங்களுக்கு வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அமைச்சர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் சொத்துகள் அதிகம் நிறைந்துள்ள வாலாஜாபாத், திருப்போரூர், செய்யூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட வருவாய் வட்டங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், விடுப்பில் செல்ல தயாராகி வருவதாக வருவாய்த்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வருவாய்த்துறை வட்டாரங்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதா வின் பெயரில் தனியாக உள்ள சொத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. மாறாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக இணைக்கப்பட்டு ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களே அதிகம் உள்ளன. எனினும், 116 ஏக்கர் பரபரப்பளவில் உள்ள சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள நிலங்கள் ஜெயலலிதாவின் பெயரிலும் உள்ளது. இவற்றை அடையாளம் கண்டு பறிமுதல் செய்வதில் பல்வேறு சிக்கல் உள்ளன.

மேலும், நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டால் ஆட்சி பொறுப்பில் உள்ள அதிமுகவினர் மற்றும் அமைச்சர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் நிலையும் உள்ளது. அதனால், சொத்துகளை பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டாலும், அதை செயல்படுத்துவதில் அதிகாரிகள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. அதனால், வருவாய்த்துறையில் உள்ள அதிகாரிகள் விடுப்பில் செல்ல தயாராகி வருகின்றனர். இவ்வாறு வட்டாரங்களில் கூறப் படுகிறது.

ஜெயலலிதா சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பான உத்தரவு குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கேட்டபோது, தமிழக அரசிடமிருந்து உத்தரவு ஏதும் வரவில்லை என்றார்.

SCROLL FOR NEXT