கடல் காற்று வீசுவதால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெப்பம் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாதத்தின் 2 மற்றும் 3-வது வாரத்தில் வெப்பம் மேலும் அதிகரித்தது. வேலூர் மற்றும் சென்னையில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஏப்ரல் மாதத்தின் 2 மற்றும் 3-வது வாரத்தில் கடல் காற்று வீசுவது குறைந்து, தரைக்காற்று அதிகரித்தது. இதன் காரணமாக பல நகரங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் இருந்தது. தற்போது கடல் காற்றும், தரைக்காற்றும் மாறி மாறி வீசுவதால், வெப்பம் குறைந்துள்ளது.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, கரூர் பரமத்தி 106.88 டிகிரி ஃபாரன்ஹீட், பாளையங்கோட்டை 106.52, திருத்தணி 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது