தேமுதிக நடத்திய மாநாட்டால் மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:
நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, எறஞ்சியில் தேமுதிக நடத்திய ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் வரலாறு காணாத வகையில் நாம் அனைவரும் ஒன்று கூடினோம்.
நம் தேசத்தில் மக்களை பெரிதும் பாதிக்கும் லஞ்சம், ஊழலில் இருந்து அவர்களை காப்பாற்றிட உறுதி கொண்டு, 50 லட்சம் தொண்டர்கள் ஒன்று கூடி இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை இன்னும் அதிகரித்து இருக்கிறது.
ஆட்சி அதிகாரம் தேமுதிகவிடம் வரும்போது, ஊழலை ஒழித்து மக்களுக்கான நல்லாட்சி வழங்கப்படும் என்ற நம்பிக்கையை இம்மாநாடு மக்களிடம் விதைத்துள்ளது.
மாநாடு வெற்றிகரமாக அமைய இரவு, பகல் பாராமல் பாடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களுக்கும், இவர்களுடன் இணைந்து பணியாற்றிய மாநாட்டுக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கானவர்களை மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.