தஞ்சை மாவட்டத்தில் 37 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட உணவுக் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்திய உணவுக் கழகத்தின் தமிழ் மாநில ஆலோசனைக்குழு சென்னையில் திங்கள்கிழமை நடந்தது. மாநில ஆலோசனைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர் அரிவிக்ரமன், துணை பொது மேலாளர் மகராஜ்குமார், உதவி பொது மேலாளர் நாகேஸ்வரராவ், தென்னக ரயில்வே துணை வணிக மேலாளர் மனோஜ் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது:
தமிழ் மாநில இந்திய உணவுக் கழகத்துக்கு தேவைப்படுகின்ற கிடங்குகளின் கொள்ளளவு சுமார் 13 லட்சம் டன் ஆகும். ஆனால், தற்போது 10.30 லட்சம் டன் கொள்ளவுக்கான கிடங்குகள் மட்டுமே உள்ளன. எனவே, இன்னும் தேவைப்படுகின்ற 37 ஆயிரம் டன் சேமிப்பு கிடங்கை தஞ்சை மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.
உணவுக் கிடங்குகளைப் பராமரிப்பதில் எவ்விதமான குறைபாடும் இருக்கக்கூடாது. பூச்சிகளால் உணவுப் பொருள்கள் பாதிக்கப்படாமல் கிடங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.