சென்னை செம்பியம் பகுதி யைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘ தமிழகத்தில் 10 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு பொது இடங்களில் தனி கழிப்பறை வசதிகள் கிடையாது. எனவே, அவர்களுக்கு தனியாக பொது கழிப்பறை ஏற்படுத்திக் கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என அதில் கூறியிருந்தார்.
கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சமூக நலத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இந்த பிரச்சினை யில் வழக்கறிஞர் தேவபிரசாத் என்பவரையும் நீதிமன்றத்திற்கு உதவ உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மாநகராட்சி இணை ஆணையருக்கு (பணிகள்) சமூக நலத்துறை இயக்குநர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், ‘‘சென்னை மாநகரில் திருநங்கை கள் அதிகம் வசிக்கும் தண்டையார் பேட்டை, சூளைமேடு, புளியந் தோப்பு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரத்யேக குளியல் அறையுடன் கூடிய கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என கோரப்பட்டுள்ளதாக அரசு வழக் கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் சென்னையில் அதிகம் வசிக்கும் பகுதிகள் குறித்து மனுதாரர் ஆய்வு நடத்த வேண்டும். அந்த பகுதிகளில் பிரத்யேக குளியல் அறையுடன் கூடிய கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு வசதியாக அந்த அறிக்கையை மனுதாரர் சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்க வேண்டும். அதன்படி, அப்பகுதிகளில் பிரத்யேக குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளை 3 மாதங்களில் செய்துதர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.