*
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) தரவரிசைப் பட்டியல் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடத்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மாணவர்களே தாங்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க விரும்பும் கல்லூரி களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் அரசு மருத் துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும், கடந்த ஜூலை 24-ம் தேதி இரண்டாம்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும் நடத்தியது. இந்த 2 கட்ட தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ கடந்த 16-ம் தேதி வெளியிட்டது.
இதில் 1,83,424 மாணவர்கள், 2,26,049 மாணவிகள், 4 திருநங்கை கள் என மொத்தம் 4,09,477 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். ஆனால் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்படி நடத்தப் படும் என்று முறைப்படி அறிவிக்காததால், மாணவர்களும், பெற்றோரும் பெரும் குழப்பம் அடைந்தனர்.
நாளிதழ்களில் விளம்பரம்
இந்நிலையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தாங்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க விரும்பும் கல்லூரி கள் மற்றும் பல்கலைக்கழகங்களை தாங்களாகவே தேர்வு செய்து விண் ணப்பிக்கலாம். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தனியார் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் நாளிதழ் களில் விளம்பரம் வெளியிட்டு வருகின்றன. அந்த விளம்பரங் களைப் பார்க்கும் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்ப தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆர்வமாக விண் ணப்பித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 52 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங் கள் மற்றும் 22 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 35 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 16 ஆயிரம் பிடிஎஸ் இடங்கள் தேசிய தகுதித் தேர்வில் தகுதி பெற்றுள்ளவர்கள் மூலமாக நிரப்பப்படுகின்றன. மொத்தம் உள்ள சுமார் 51 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு தேர்வில் தகுதி பெற்றுள்ள 4,09,477 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கட்டணம் மாற்றமில்லை
இது தொடர்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்ட போது, “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றுள் ளவர்களே தாங்கள் படிக்க விரும் பும் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். நாங் கள் நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலின்படி அவர்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கையை நடத்துவோம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் கடந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வசூலித்த கட்டணங் களே வசூலிக்கப்படும்” என்றனர்.
கண்காணிப்பு இல்லை
இதுபற்றி மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்ட போது, “தனியார் கல்லூரிகள் மற் றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாணவர் சேர்க்கை முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு எந்த குழுவும் அமைக்கவில்லை” என்றனர்.
முறைகேடுகளுக்கு வாய்ப்பு
“தேசிய தகுதி மற்றும் நுழை வுத் தேர்வில் தகுதி பெற்றவர் களுக்குக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் நுழைவுத் தேர்வு தர வரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த தனியார் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதுபற்றி தேர்வு நடத்திய சிபிஎஸ்இ இணையதளத் திலோ, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைய தளங்களிலோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள் ளது. இதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தாமலே இருந்திருக்கலாம்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால் கூறும்போது, “தற்போதுள்ள சூழ்நிலைப்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க தங்களுக்கு விருப்பமான தனியார் கல்லூரி களையோ, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையோ தாங்களாகவே தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வின் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டும். அவர்கள் கேட்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதுதான் தற்போதைய நிலை. இது மாறுவதற்கும் வாய்ப்புள்ளது” என்றார்.