ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால், நேற்று காலை கோவை எக்ஸ்பிரஸில் செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான பயணிகள் 2 மணி நேரம் பரிதவித்தனர். ரயிலுக்கான ‘சார்ட்’ வெளியிடுவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.15 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. தீபாவளிக்கு இந்த ரயிலில் செல்ல முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் நேற்று அதிகாலையிலே சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். அதற்கு முன்னதாக ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளின் பெயர் கொண்ட ‘சார்ட்’ வெளியிடப்படாததால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
அதனால் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு சென்ட்ரலில் உள்ள விசாரணைக் கவுன்ட்டரில் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயில் புறப்பட வேண்டிய நேரமாகியும் ‘சார்ட்’ வெளியிடப்படாதது ஏன்? என்று அதிகாரிகளிடம் பயணிகள் வாய்த்தகராறு செய்தனர். இதையடுத்து ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்றும், அதனால்தான் ‘சார்ட்’ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் சலசலப்புக்கு பிறகே, கோவை எக்ஸ்பிரஸ் தாமதம் பற்றி ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது. கடைசியில், ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக காலை 7.30 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பயணிகள் சுமார் 2 மணி நேரம் பரிதவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், அக்டோபர் 20-ம் தேதி இரவு 10.25 மணிக்கு சென்ட்ரல் வந்து சேர வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ், இரவு 12.50 மணிக்குத்தான் வந்து சேர்ந்தது. பணிமனைக்கு இரவு 1.30 மணிக்குத்தான் போனது. ஒரு ரயிலில் பராமரிப்புப் பணியை முழுமையாக செய்து முடிக்க குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகும். இந்த ரயிலில் 2 பெட்டிகள் பழுதாகி இருந்ததால், அதையும் சரி செய்தனர். பராமரிப்புப் பணி முடிந்து ரயில் தயாரான பிறகே, ‘சார்ட்’ வெளியிடுவது வழக்கம். அதனால்தான் காலை 6.15 மணிக்குப் புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது” என்றார்.