சட்டம் இருந்தும் அதிகாரிகள் சரியாக அமல்படுத்துவதில்லை
பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அந்த அறிக்கையை வரும் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் டி.சி.சரத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் ஸ்டுடியோ 11 என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன். எங்கள் பகுதியில் புலியூர் 2-வது தெருவில் பகவதி என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருபவர்கள் கடை விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே சிகரெட் பிடிப்பவர்களை ஊக்குவித்து வருகின்றனர். அளவுக்கு அதிக மான புகையால் நாங்கள் மட்டு மின்றி பொதுமக்களும் பாதிப் படைந்து வருகின்றனர். பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக் கூடாது என சட்டம் இருந்தும் அதை அதிகாரிகள் சரியாக அமல் படுத்துவதில்லை. எனவே அந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சிகரெட் பிடிப்பதால் தீங்கு மூக்குக்கு, கெடுதல் மூளைக்கு, பாதிப்பு நுரையீரலுக்கு என்பது இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸின் கூற்று. கல்வி நிலையங் களில் இருந்து 100 மீட்டர் தொலை வுக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கக்கூடாது என சட்டமே உள்ளது. ஆனால் பள்ளி செல்லும் சிறுவர்களுக்குக்கூட சிகரெட் எளிதாக கிடைக்கிறது.
கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் தமிழகத்தில் புகையிலை விற்பனை தொடர்பாக உள்ள சட்ட விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.
உலக சுகாதார நிறுவனம் சிகரெட் பழக்கத்தில் இருந்து சிறுவர்கள் உள்ளிட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என ஒவ்வொரு கூட்டத்திலும் கோரி வருகிறது. சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை தடை செய்யும் கோட்பா சட்டம் 2003 பிரிவு 4-ன்படி பொது இடங்களில் புகைபிடிப்பதும், கல்வி நிலையங்களின் அருகில் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
சமீபத்தில் சென்னையில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், புகையிலை நிறுவனங்கள் சிறுவர்களை குறிவைத்து விற்பனையை அதிகரித்து வருகின்றன என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், கல்வி நிலையங்களின் அருகில் சிகரெட் விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் 100 சதவீதம் மீறப்பட்டுள்ளது. 88.9 சதவீத பெட்டிக் கடைகளில் புகைபிடித்தல் கூடாது என்ற எச்சரிக்கை பலகைகள் இல்லை. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது குற்றம் என்ற அறிவிப்பு பலகை 98 சதவீத கடைகளில் இல்லை. 84 சதவீத கடைகளுக்கு முன்பாக, பொதுமக்களுக்கு இடை யூறாகத்தான் புகைபிடிக்கப்படு கிறது. இதில் 87.7 சதவீத கடை களில் சிறுவர்களுக்கு தாராளமாக சிகரெட் விற்பனை செய்யப்படு கிறது. சென்னையில் 41.1 சதவீத மாணவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கலையரங்குகள், மருத்துவமனைகள், சுகாதார நிலை யங்கள், கல்வி நிலையங்கள், நூலகங்கள், நீதிமன்ற வளா கங்கள், பொது அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங் களில் சிகரெட் மற்றும் புகையிலை விற்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் சுகாதாரத் துறை அமைச்சகமும், போலீஸ் டிஜிபியும் சிறப்பு பறக்கும் படை களை அமைத்து திடீர் ரெய்டு நடத்தி பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் புகையிலை குறித்த சட்டவிதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த அறிக்கையை ஜூன் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.