முதல்வர் ஜெயலலிதாவின் அலட்சியப் போக்கால் சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ரூ. 1,815 கோடியிலான சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கான ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாக ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக தொடக்கத்திலிருந்து பாடுபட்டவன் என்ற முறையில் பல்வேறு நினைவுகள் என் சிந்தையில் எழுந்தன.
சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் லாரிகள் இரவு 10 முதல் காலை 5 மணி வரை மட்டுமே நகருக்குள் நுழைய முடியும். இதனால் துறைமுகத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் சென்னை துறைமுகத்துக்குப் பதிலாக விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். இதனால் தமிழகத்துக்கு வர வேண்டிய வருவாய் ஆந்திரத்துக்குச் சென்றது. இந்நிலையை சீர்படுத்துவதற்காக திமுக அரசின் கோரிக்கையை ஏற்று பறக்கும் சாலை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த 8-1-2009-ல் எனது தலைமையில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
2010 செப்டம்பரில் திட்டப் பணிகள் தொடங்கின. மொத்தம் 889 ராட்சத தூண்களில் 120 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. அதில் 15 தூண்களில் சாலைகள் அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டு விட்டது. இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி இந்தத் திட்டத்துக்கு தடை விதித்தது.
இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்திருந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்து சென்னை துறைமுகத்தின் வருவாய் அதிகரித்திருக்கும். தமிழகத்துக்கும் அதிக வருவாய் கிடைத்திருக்கும். இந்திய பிரதமர் அலுவலகம், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், பத்திரிகைகள் பலமுறை எடுத்துரைத்தும், இடித்துரைத்தும், நீதிமன்றங்கள் மூலமாக முயற்சித்தும் இந்தத் திட்டம் முடக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியால் சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் மாபெரும் திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாழ் மக்கள் சஞ்சலம் கொள்கிறார்கள். ஆனால், முதல்வர் ஜெயலலிதா சாதித்து விட்டதாக சந்தோஷம் கொள்கிறார்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.