அமெரிக்க ஆயுதக் கப்பல் வழக்கில், வரும் மார்ச் 7-ம் தேதி விசாரணை தொடங்குகிறது.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள், ஆயுதங் களுடன் நுழைந்த அமெரிக்காவின் தனியார் கப்பல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான, ‘சீமேன் கார்டு ஓகியோ’ என்ற கப்பலை, இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த அக்.12-ம் தேதி சிறை பிடித்தனர்.
கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். 35 அதிநவீன துப்பாக்கிகள், 5,680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதனைத் தவிர, அமெரிக்க கப்பலுக்கு சட்டவிரோதமாக டீசல் வழங்கியதாக தூத்துக்குடியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட் டனர். முனித்தேவர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும், 2 பேர் தொடர்ந்து தலை மறைவாக உள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கில் அமெரிக்க கப்பல் நிறுவனம் உள்ளிட்ட 45 பேர் மீது கியூ பிரிவு போலீஸார் கடந்த டிசம்பர் 30-ம் தேதி 2,158 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 41 பேருக்கு கடந்த 14-ம் தேதி குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப் பட்டன. டீசல் வழங்கிய வழக்கில் 4 பேருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற யாருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், கப்பல் ஊழியர்கள் 35 பேரின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க் கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள வெளி நாட்டினர் 23 பேரும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 12 இந்தியர்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் சி.கதிரவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதேபோல் டீசல் வழக்கில் தொடர்பு டையவர் களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஆங்கிலத்தில் நகல்
போலீஸார் வழங்கிய குற்றப்பத் திரிகையில், சாட்சிகளின் வாக்கு மூலம் 77 பக்கங்களில் தமிழில் இடம் பெற்றிருந்தது. ‘இதனை தங்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தரவேண்டும்’ என, கப்பல் ஊழியர்கள் 35 பேரும் கோரியிருந்தனர். அதன்பேரில் 77 பக்கங்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டன. இதேவேளையில், ‘குற்றப் பத்திரிகை நகல் ஆங்கிலத்தில் இருப்பதால் படிக்க முடியவில்லை. அதனை தமிழில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும்’ என, டீசல் வழங்கிய வழக்கில் கைதான 6 பேரும் கோரினர்.
‘குற்றப்பத்திரிகை நகலை தமிழில் மொழி பெயர்த்து வழங்க ஒரு வார கால அவகாசம் வேண்டும்’ என, கியூ பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதித்துறை நடுவர் சி. கதிரவன், குற்றப்பத்திரிகை நகலை ஒருவாரத்துக்குள் தமிழில் மொழி பெயர்த்து வழங்கவும் 35 பேரின் நீதிமன்ற காவலை வரும் மார்ச் 5-ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
விசாரணை தொடக்கம்
மேலும், இந்த வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மார்ச் 7-ம் தேதி மாற்றப்பட்டு அங்கு விசாரணை தொடங்கும், எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரிவுகள் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கக் கூடியதாகும். அதனை விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு கிடையாது. எனவே, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், இரண்டாது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு வழக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க கப்பல் வழக்கில் கைதான வெளிநாட்டினர், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.