விவசாயிகள் மரணம் பற்றி பேசுவதற்காக சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று பகல் 1 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின், தனது அறையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, க.பொன்முடி, எ.வ.வேலு, ரங்கநாதன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சேகர்பாபு உள்ளிட்டோர் முதல்வரின் அலுவலகத்தில் அளித்தனர்.
அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கடந்த அக்டோபர் 14-ம் தேதி எனது தலைமையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தங்களிடமும், தலைமைச் செயலாளரிடமும் நேரில் வழங்கினேன்.
காவிரி நீர் கிடைக்காததால் விவசாயம் பேரிடரைச் சந்தித்து வருகிறது. வாடிய பயிர்களையும், வறண்ட நிலங்களையும் காணும் விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 59 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி மரணத்தாலும் உயிரிழந்துள்ளனர். நேற்று (டிச. 30) மட்டும் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணம்கூட இறந்த விவசாயி களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.
இதனால் எலிக் கறி சாப்பிடும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர். இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டிருப்பது தமிழ கத்தின் நலனுக்கு நல்லதல்ல. இந்தச் சூழலில் விவசாயிகளின் துயரங்களை முதல்வரிடம் நேரில் எடுத்துச் சொல்லி, சில கோரிக்கைகளை எடுத்து வைக்க விரும்புகிறேன். அதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச முதல்வர் நேரம் ஒதுக்குவார் என நம்புகிறேன்’’ என்றார்.