தருமபுரி மாவட்டத்தில் கர்நாடகா எல்லையையொட்டி அமைந்துள்ள காவிரி கரையோர கிராமங்களில் தீவனம், குடிநீரின்றி மாடுகள் உயிரிழந்து வருவதைத் தடுப்பதற்கு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் நாகமரை அருகேயுள்ள ஒட்டனூரில் இருந்து காவிரியாற்றைக் கடந்து மறுகரைக்கு சென்றால் கோட்டையூர் கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களும், கர்நாடகா மாநிலம் கோபிநத்தம் அருகே உள்ள தமிழக பகுதிகளான கொங்கிரிப்பட்டி, குழிப்பட்டி, ஏமனூர், சிங்காபுரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களும் விவசாயத்துடன் ஆடு, மாடுகள் வளர்ப்பினை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரிய ஆலம்பாடி நாட்டு மாடுகளையே வளர்க்கின்றனர்.
இவர்களின் கால்நடைகள் காவிரியாற்றை ஒட்டிய பகுதி, வனம் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளிலும் மேய்க்கப்படுவது வழக்கம். இவர்கள் வளர்க்கும் கால்நடைகள் பெரும்பாலும் தன்னிச்சையாக திரிந்து மேயும் வகையில் சுதந்திரமாக விடப்படும். அதேநேரம், இவற்றின் கன்றுகள் விவசாயிகளால் பராமரிக் கப்படுவதால் மேய்ச்சலுக்கு வனப்பகுதிகளுக்கு செல்லும் மாடுகள் மாலைநேரத்தில் விவசாயிகளின் தோட்டத்துக்கு தாமாகவே திரும்பி விடும். காவிரியாற்றை ஒட்டிய பகுதி என்பதால் இந்தக் கால்நடைகளின் குடிநீர் தேவை ஆற்றின் மூலம் நிறைவேறி விடும்.
இவ்வாறு சுதந்திரமாக மேய்ந்து வரும் கால்நடைகள் தற்போதைய கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியில் புற்கள், இலை தழைகள் கிடைக்காமலும், தண்ணீரின்றியும் தவித்து வருகின்றன. தொடர்ந்து வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் தீவனம், தண்ணீர் கிடைக்காமல் மீண்டும் திரும்பி வரும்போது கடும் வெயிலாலும், பசியாலும் ஆங்காங்கே செத்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரங்களில் வனப்பகுதியிலும், ஆற்றங்கரையோரத்திலும் பல மாடுகள் உயிரிழந்துவிட்டன.
வறட்சி பிரச்சினை தீரும் வரை வனத்தையொட்டி காவிரி கரையோரத்தில் உள்ள மாடுகளுக்கு தீவனமும், தண்ணீரும் வழங்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடை இறப்பு நிகழும் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியது :
காலங்காலமாக வளர்த்து வந்த கால்நடைகளில் பலவற்றை இந்த ஆண்டு வறட்சிக்கு பறி கொடுத்து விட்டோம். லேசாக தற்போது பெய்துள்ள கோடை மழையால் மிச்சமிருக்கும் கால்நடைகளுக்கு ஒரு சிறிய தீர்வு கிடைத்துள்ளது. ஆனால், இந்த தண்ணீர் ஒரு வாரத்திற்கு கூட போதாது. மிச்சமிருக்கும் கோடை நாட்களை சமாளித்து மழைக்காலம் வரை கால்நடைகளை காப்பாற்றுவது என்பது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. தற்போதைய வருமானமற்ற நிலையில் விலை கொடுத்து கால்நடைகளுக்கு தீவனம் வாங்கித் தருவதும் இயலாதது.
எனவே, நம் மாநிலத்தின் கால்நடை இனங்களை, குறிப்பாக பாரம்பரிய ரக மாடுகளை அழிவில் இருந்து காக்க விரும்பி அரசாக முன்வந்து இலவசமாக தீவனம் வழங்கினால் மட்டுமே நாங்கள் இந்த நிலைமையைக் கடந்து வர முடியும். இவ்வாறு கூறினர்.
தருமபுரி மண்டல கால்நடைத் துறை இணை இயக்குநர் சீனிவாசனிடம் இது பற்றி கேட்டபோது அவர் கூறியது :
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் எங்காவது அரிதாகத் தான் வயதான ஓரிரு கால்நடைகள் இறந்துள்ளன. மற்றபடி, காவிரியாற்றின் மறுகரையை ஒட்டிய பகுதியில் இறப்பதாக கூறப்படும் கால்நடைகள் தமிழகத்தை சேர்ந்தவர்களின் கால்நடைகள் அல்ல. தமிழக எல்லையை ஒட்டிய கர்நாடகா மாநில பகுதியில் வசிப்பவர்களின் கால்நடையாக இருக்கலாம்.
தருமபுரி மாவட்ட கால்நடைகளின் தீவன தேவைக்காக 12 இடங்களில் தீவன விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு மொத்தம் 105 கிலோ வீதம் வாரம் ஒருமுறை மானிய விலையில் தீவனம் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ தீவனம் ரூ.2 விலையில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில் மாநில கால்நடைத் துறை உயர் அதிகாரிகள் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஆபிரகாம் தலைமையில் சென்னையில் இருந்து சேலம் வந்து நேற்று மேட்டூரை அடுத்துள்ள காவிரிக் கரையோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
உடனடி தீவனம் விநியோகம்
கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஆபிரகாம் தலைமையிலான குழு மற்றும் மேட்டூர் சப்-கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் கோவிந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, கோவிந்தப்பாடி அருகே சத்தியா நகர் கால்நடை மருத்துவமனையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் கால்நடைகளுக்கான உலர் தீவனம் வழங்கியதுடன், தொடர்ந்து தீவனம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், பாலாற்றங்கரையில் 2 தண்ணீர் தொட்டிகள் மற்றும் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆய்வுக்குப் பின்னர் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஆபிரகாம் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு குடிநீர் மற்றும் உலர் தீவனம் வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.78 கோடி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது,’’ என்றார்.