இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா விளங்குகிறது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் 55,000 பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஈஷா யோகா மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசும்போது, "யோகா தினத்தின் நோக்கமே ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே. இவ்வுலகுக்கு யோகாவை இந்தியா பரிசாக அளித்துள்ளது. இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா உள்ளது'' என்றார்.
மேலும் அவர் கூறும்போது தமிழகம், மகாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் யோகா கற்றுத்தரப்படும் என்றார். -