எனக்கு தமிழ் மொழி மீது ஆர்வமும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. தற்போது அதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தமிழில் வணக்கம் தெரிவித்து ஆங்கிலத்தில் பேசுகையில், ''உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் என்னால் முடிந்த வரை பாடுபடுவேன். பாரம்பரியமிக்க இந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன். தமிழ் ஒரு பழமையான, தொன்மையான, கலாச்சார, பண்பாடு மிக்க மொழியாகும். தமிழ் இன்று பல நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது.
எனக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. என் உறவினர்கள் இங்கு உள்ளனர். உறவினர் ஒருவர் தமிழரை மணந்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்துக்கு நான் சுற்றுலா வந்துள்ளேன். தற்போது தமிழகத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனக்கு தமிழ் மொழி மீது ஆர்வமும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. தற்போது அதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் பல முன்மாதிரி தீர்ப்புகள் அனைத்து நீதிமன்றங்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளன. நான் அரசியல் சாசனப்படி செயல்படுவேன். அதற்கு அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறையினரின் ஒத்துழைப்பும் அவசியம்'' என்று பேசினார்.