ஆர்.கே.நகரில் அரசு கலை கல்லூரி யில் படிக்கும் மாணவர்கள் அடிப் படை வசதி இல்லாமல் அல்லல் படுகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாக மாநகராட்சி பள்ளியில் தொடங் கப்பட்ட இக்கல்லூரி இன்னும் அங்குள்ள வகுப்பறையில்தான் இயங்கி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் தொகுதியில், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. பொருளாதாரம், பி.காம். ஆகிய 3 பட்டப்படிப்புகளுடன் கடந்த 29.9.2015 அன்று ஆர்.கே. நகர் அரசு கலைக் கல்லூரி செயல்படத் தொடங்கியது. தற்காலிக ஏற்பாடாக தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பள்ளியின் முதல் மாடியில் 5 வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல் 3 அறைகள் வகுப்புகள் நடத்தவும், 4-வது அறை அலுவலகப் பயன்பாட்டுக்காகவும், மற்றொரு அறை ஆசிரியர்கள் ஓய்வெடுக்கவும் ஒதுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு கூடுதலாக பி.காம். (கார்ப்பரேட் செக்ரட்டரி ஷிப்) படிப்பு தொடங்கப்பட்டது. மாணவ-மாணவிகளும் ஆர்வத் தோடு சேர்ந்தனர். தற்போது 330 மாணவ-மாணவிகளுடன் 8 ஆசிரி யர்கள், ஒரு நூலகர், 5 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுடன் கல்லூரி இயங்கி வருகிறது.
இதற்கிடையே, தண்டையார் பேட்டை லட்சுமி கோயில் பஸ் ஸ்டாப் அருகே ரூ.8 கோடியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டவும் கட்டமைப்பு பொருட்கள் வாங்குவதற்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். கட்டுமானப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று கடந்த ஆண்டு புதிய கட்டிடமும் தயாரானது. புதிய கட்டிடத்தை நேரில் சென்று திறந்துவைக்க வேண் டும் என்று ஜெயலலிதா விரும்பி னார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் அவர் காலமானார்.
புதிய கட்டிடம் இன்னும் திறந்து வைக்கப்படாததால் ஆர்.கே. நகர் அரசு கல்லூரி இன்னும் மாநகராட்சி பள்ளி கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. போதிய அளவுக்கு விசாலமான வகுப்பறைகள், மேஜை-இருக்கை வசதி, குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்து மிடம் என அடிப்படை வசதிகள் இல்லாததால் இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப் படுகிறார்கள். இடப்பற்றாக்குறை காரணமாக பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கீழ்தளத்தில் உள்ள சத்துணவு மையத்தில் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.சாந்தி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மாணவ-மாணவிகளின் வகுப்புக்காக 3 அறைகளே உள்ளன. இடப்பற்றாக்குறை காரணமாக முதல் ஆண்டு மாணவர்களுக்கு காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, 2-ம் ஆண்டு படிப்பவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5.30 மணி வரை என 2 ஷிப்டுகள் போட்டு வகுப்புகளை நடத்திக் கொண்டிருகிறோம். குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, இருக்கை வசதிகள் அனைத்தையும் செய்து புதிய கட்டிடத்தை விரைவில் திறந்தால் மாணவ-மாணவிகளுக்கு படிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரியின் துணை முதல்வர் பொறுப்பில் இருக்கும் தமிழ் இலக்கியத்துறையின் தலைவரான பேராசிரியர் த.காமராஜ் கூறுகை யில், “ஆங்கிலம், வணிகவியல், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பாடங் களுக்கு புதிதாக 5 ஆசிரியர்கள் வேண்டும். மேலும், பி.ஏ. தமிழ் இலக்கியம், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், ஜியாலஜி போன்ற படிப்புகளையும் இங்கு ஆரம்பிக்க வேண்டும். இதனால், ஆர்.கே. நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மிகவும் பயனடைவர்” என்றார்.