சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் செல்லும் வழித்தடத்துக்கு மத்திய அரசிடம் விரைவில் ஒப்புதல் பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
இது தொடர்பாக தமிழ்க சட்டப் பேரவையில் இன்று ஆளுநர் தனது உரையில் கூறும்போது, "சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதை இங்கு நான் மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன்.
நமது முதல்வர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் நாள் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதுவரை, மாநில அரசிலிருந்து மூலதன உதவி மற்றும் கடனாக 3,060.74 கோடி ரூபாயும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் கடன் உதவியாக 3,864.83 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் செல்லும் வழித்தடத்திற்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒப்புதல் பெறவும், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கான புதிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்யவும் இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.
'கச்சத் தீவை மீட்ப முயற்சி'
ஆளுநர் உரையில் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பக இடம்பெற்றவை: "தமிழ்நாட்டிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும்
இந்திய மீனவர்கள் அவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பாக் நீரிணைப் பகுதியில், எந்தக் காரணமுமின்றி இலங்கைக் கடற்படையால் கொலைவெறித் தாக்குதல்களுக்கு தொடர்ந்து உட்படுத்தப்படுவது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மீனவர் சமுதாயத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வர், பாரதப் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி, உணர்ச்சிகரமான இந்தப் பிரச்சினைகளுக்கு தூதரக அளவில் முயற்சி மேற்கொண்டு ஒரு உறுதியான முடிவினை எட்டி இந்திய மீனவர்களை மத்திய அரசு காக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலவியல் அடிப்படையிலும், வரலாற்று ரீதியாகவும், கலாச்சாரத் தொடர்பின் அடிப்படையிலும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்த கச்சத் தீவை மீட்டு எடுக்க வேண்டும் என முதல்வர் அயராது போராடி வருகிறார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் மனப்பான்மையோடு, தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்திட முதல்வர் அனுமதி அளித்தார். இந்த மதிநுட்பமிக்க முதல்வரின் நடவடிக்கையால், நீண்டகாலமாக இலங்கையால் கைது செய்யப்பட்டிருந்த 295 மீனவர்களும் அவர்களது 45 படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார பிரச்சினை
இந்த அரசு சந்தித்த பெரும் சவால்கள் மின்துறையைச் சார்ந்ததே. பெருமளவிலான மின்தட்டுப்பாடு, பலவீனமான மின்கடவு மற்றும் விநியோகக் கட்டமைப்பு, கடனில் மூழ்கிய மின் நிறுவனங்கள் போன்ற சவால்களை இந்த அரசு பொறுப்பேற்றபோது எதிர்கொள்ள நேரிட்டது.
எனினும், முதல்வரின் நுண்ணறிவும், விசாலமான பார்வையும் மின்சாரத் துறையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளன. மின் உற்பத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி செயலாக்கத்திற்குக் கொண்டுவந்து, கணிசமான
அளவிற்கு கூடுதல் உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மாநில மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளன.
முதலீட்டாளர்களுக்கு உகந்த புதிய சூரிய மின்சக்திக் கொள்கை மூலமாக சூரிய மின்சக்தியை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிகள் அனைத்தும் மாநிலத்தில் போதிய மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்து எதிர்காலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தை முழுமையாக எட்டாது என இந்த அரசு கருதுகிறது.
முதல்வர் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, தற்போதுள்ள பொதுவிநியோகத் திட்ட உணவு தானிய ஒதுக்கீடு மற்றும் எடுப்பு அளவுகளை உறுதி செய்யும் வகையில், சட்ட வரைவை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ள போதிலும், இச்சட்டத்தில் இன்னும் பல குறைபாடுகள் உள்ளன.
எதிர்காலங்களில் உணவு தானிய விலையை நிர்ணயிப்பதில் எந்த உறுதிமொழியும் இல்லாமை, நகர்ப்புர மக்கள் தொகையில் குறைந்த அளவிற்கே பலன் அளித்தல் மற்றும் தகுதியுள்ள குடும்பங்களைக் கண்டறிவதற்குத் தெளிவான வழிமுறைகள் இல்லாமை ஆகியன இச்சட்டத்தின் நோக்கத்தை எய்தத் தடைகளாக அமைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும், அனைவருக்கும் பலன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்ட முறையைத் தொடர்ந்து அனுமதிக்கும் வகையில், தேவையான நெகிழ்வுத் தன்மையுடன் இச்சட்டத்தின் புதிய நடைமுறை இருந்திட வேண்டும் என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
அம்மா உணவகத்துக்கு வரவேற்பு
சென்னை மற்றும் பிற நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள 290 அம்மா உணவகங்கள் ஏழைகளுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். இவ்வகையில், முதல்வரின் சிந்தனையில் உருவான இந்தச் சீரிய திட்டத்தை ஏனைய மாநிலங்கள் பின்பற்ற முனைந்திருப்பதில் வியப்பேதும் இல்லை" என்று தனது உரையில் ஆளுநர் கூறினார்.