தமிழகம்

புத்தகத்தை காப்பி அடித்துவிட்டதாக தா.பாண்டியன் மீது எழுத்தாளர் புகார்

ம.சரவணன்

தனது புத்தகத்தின் தலைப்பு, உட்கருத்துகளை காப்பி அடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், தனது பெயரில் புத்தகத்தை வெளியிட்டு மோசடி செய்துள்ளதாக, கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் ஆ.வெங்கடாசலம். இவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புத்தக உரிமம் தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீது புகார் அளித்துள்ளார். அது தொடர்பான விசாரணைக்கு நேற்று அழைக்கப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் அவர் கூறும்போது, ‘‘திருவள்ளுவனாரின் அரசியல் - பொருளாதாரக் கொள்கைகள்’ என்ற தலைப்பில் கடந்த 2013-ம் ஆண்டில் புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். இந்நிலையில், நியூ சென்சுரி புத்தக நிலையம் சார்பில், இந்திய கம்யூ. கட்சியின் முத்த தலைவர் தா.பாண்டியன் எழுதி, கடந்த மார்ச் 5-ம் தேதி, கோவையில் வெளியிடப்பட்ட புத்தகம் குறித்து அறிந்தேன். அந்த புத்தகத்துக்கு ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

நான் வெளியிட்ட நூலின் தலைப்பை சிறிது மாற்றத்துடன் அப்படியே எடுத்து கையாண்டுள்ளது தெரியவந்தது. நான் எழுதியுள்ள புத்தகத்தின் கருத்துகள், உப தலைப்புகளில் கையாண்டுள்ள கருத்துகள், கணிப்புகள், எழுத்து நடைமுறை ஆகியவற்றை சிறிது மாற்றி அமைத்து அந்த நூலின் ஆசிரியர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். எனவே, விசாரணை நடத்தி, தா.பாண்டியன் மீது புத்தகத்தை காப்பி அடித்து எழுதும் திருட்டு வழக்கைத் தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

போலீஸார் கூறும்போது, “விசாரணைக்குப் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றனர்.

தா.பாண்டியன் விளக்கம்

இதுகுறித்து தா.பாண்டியன் கூறும்போது, ‘‘புத்தகம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதும், அதனை யார் கொடுத்தார்கள் என்பதும் இதுவரை எனக்கு தெரியாது. திருவள்ளுவரின் கருத்துகள் என்பது எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. அனைவருக்கும் பொதுவானது. புகார் குறித்து அறியும்போது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT