தமிழகம்

5 ஆண்டுகளாக குழாய்களில் விநியோகம் இல்லை: மதுரை ஆனையூரில் ஒரு குடம் குடிநீர் ரூ.12 - தனியார் லாரிகளில் வாங்கும் அவலம் நீடிப்பு

செய்திப்பிரிவு

மதுரை ஆனையூரில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தியும் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அதனால் அப்பகுதி மக்கள் தனியார் லாரிகள் மூலம் ஒரு குடம் உப்புத் தண்ணீர் ரூ.6, நல்ல தண்ணீர் ரூ12-க்கு வாங்கும் அவலம் தொடர்கிறது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஆனையூர் நகராட்சி மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதி தற்போதைய மாநகராட்சியில் 2, 3, 4 வார்டுகளாக உள்ளன. இந்த வார்டுகளில் சில குடியிருப்பு பகுதிகளை தவிர மற்ற அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மாநகராட்சி குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் நடை பெற்றது.

இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதி குடிநீர் குழாய்களில் குடிநீர் வருவதில்லை. 7 நாள், 10 நாள், 15 நாளுக்கு ஒருமுறை மாநகராட்சி லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சியாக இருந்தபோது குடிநீர் விநியோகத்துக்காக கட்டிய 7 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் இதுவரை குடிநீர் ஏற்றப்படவில்லை.

இது குறித்து எஸ்.ஆலங்குளம் டெலிபோன் காலனியைச் சேர்ந்த குணசீலன், நாதன், அப்துல் ரகுமான் ஆகியோர் கூறியதாவது:

சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஆனையூர் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக இரும்பாடி ஆனையூர் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் 2010-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் (ஊரக கிராம குடிநீர் கோட்டம்) மூலம் பல கோடி ரூபாய் செலவில் அமல்படுத்தப்பட்டது. இதற்காக இப்போதைய 2, 3, 4 வார்டுகளில் அப்போதைய ஆனையூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்புகள் வழங்கின. ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.6 ஆயிரம் டெபாசிட் கட்டணம், குழாய் பதிப்பு மற்றும் பிற செலவினங்களை சேர்த்து 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்து குடிநீர் இணைப்பு பெற்றோம். குடிநீர் திட்டத்தை செயல்படுத்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் வெளியேறியது. இதனால் இத்திட்டம் தோல்வியடைந்தது.

இத்திட்டத்துக்காக கட்டிய மேல்நிலை குடிநீர் தொட்டிகளும், குடிநீர் குழாய்களும் காட்சிப் பொருளாக உள்ளன. நூறு சதவீதம் குடிநீர் விநியோகம் செய்வதாகக் கூறும் மாநகராட்சி எங்கள் பகுதி குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யாமல் அலட்சியம் காட்டுகிறது.

இதனால் டெலிபோன் காலனி, கலை நகர், சாஸ்தா நகர், எஸ்.வி.பி. நகர் ஆகிய பகுதி மக்கள் லாரிகளில் உப்பு தண்ணீரை 6 ரூபாய்க்கும், நல்ல தண்ணீரை 10 முதல் 12 ரூபாய்க்கும் வாங்குகிறோம் என்றனர்.

லாரியில் குடிநீர் விநியோகம்

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இரும்பாடி குடிநீர் திட்டத்தை குடிநீர் வடிகால் வாரியம் நிறைவேற்றியது. அதற்கும் மாநகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் டெபாசிட் கட்டணம் வாங்கவில்லை. ஒரு சில பகுதிகளில் குழாய்களில் ஆழ்துளை கிணறுகளில் எடுக்கப்படும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் லாரி தண்ணீரை விநியோகம் செய்கிறோம். இப்பகுதி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்காக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றனர். 4-வது வார்டு கவுன்சிலர் சண்முகத்திடம் கேட்டபோது, லாரிகளில் வழங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. தண்ணீர் வழங்காவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்களே என்றார்.

SCROLL FOR NEXT