தமிழகம்

பெரியாரின் கொள்கைகளை இறுதிவரை துணிச்சலுடன் பின்பற்றியவர் சின்னகுத்தூசி: நினைவு விருது விழாவில் நல்லகண்ணு புகழாரம்

செய்திப்பிரிவு

பெரியாரின் கொள்கைகளை கடைசி வரை துணிச்சலாகப் பின் பற்றியவர் மறைந்த மூத்த பத்தி ரிகையாளர் சின்னகுத்தூசி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு புகழாரம் சூட்டினர்.

மறைந்த மூத்த பத்திரிக்கை யாளர் சின்னகுத்தூசியின் பிறந்தநாள் விழா மற்றும் 6-வது ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா, சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் சென்னையில் 15-ம் தேதி நடந்தது. இதில் கவிஞர் இளவேனிலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த கட்டுரைகளுக்காக கட்டுரையாளர்கள் காஞ்சி கருணாநிதி, க.முகிலன், பத்திரிகையாளர் பிருந்தா சீனிவாசன் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விருது, பரிசுகளை வழங்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு பேசியதாவது:

பெண்கள் மத்தியில் பல நல்ல கருத்துகளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் எடுத்துச் செல்கிறது. நல்ல கருத்துகளைச் சொல்லும் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது பாராட்டுக்குரியது. இன்றைய அரசியலுக்கு பெரியார், கம்யூனிஸம் பற்றிய வாதங்கள் தேவை. அதைச் சரியாக செய்தவர் சின்னகுத்தூசி. குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம்கூட ஜெயேந்திரர் முன்பு தரையில் அமர்ந்தார். ஆனால், பெரியாரின் புத்தகத்தை ஜெயேந்திரருக்குப் பரிசாக வழங் கியவர் சின்னகுத்தூசி. அதுதான் கொள்கை மீதான துணிச்சல்.

காந்தியையே சாதிப் பெய ரோடு சொல்லும் நிலைக்கு இன் றைய அரசியல் வந்துவிட்டது. தமிழகத்தில் அரசியல் மாற்றத் துக்கான கருத்துகள் வரும்போது, அதை ஆதரித்துப் பாராட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இளவேனில் பேசியபோது, ‘‘பெரியாரிய மற்றும் கம்யூனிஸக் கொள்கைகளுக்கு இடையே ஒற்றுமை இருப்பதை எழுத்தாளர்கள் சின்னகுத்தூசியும் திருநாவுக்கரசுவும்தான் எனக்குப் புரியவைத்தார்கள். இந்தியாவின் தத்துவஞானத்தை அறிய முற்பட்டால் அது புத்தரில் தொடங்கி பெரியாரில் வந்து நிற்கும்’’ என்றார்.

திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான திருநாவுக்கரசு பேசும்போது, ‘‘பெரியாரின் கொள்கைகளை கடைசிவரை பின்பற்றினார் சின்னகுத்தூசி. அவரைப்போல அரசியல் கட்டுரைகள் எழுத தற்போது யாரும் இல்லை’’ என்றார்.

மூத்த பத்திரிகையாளர் ஜவஹர், காங்கிரஸ் கட்சியின் மாநில ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT