சமூக நீதியை காத்த மகாதலைவர் கருணாநிதி. அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழாவில் காதர் மொய்தீன் பேசியதாவது:
''தமிழக சட்டப்பேரவையில் 60 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்து, தமிழ் சமுதாய முன்னேற்ற பணிகளை மேற்கொண்டவர் கருணாநிதி. சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. மாநில சுயாட்சியை நிலைநாட்ட பாடுபட்டவர்.
தமிழகத்தின் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழியாமல் பாதுகாத்த பெருமைக்குரியவர். சமூக நீதியை காத்த மகாதலைவர் அவர். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தமிழகத்தில் அவர் ஆற்றிய பணிகள் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்லாது, அப்பணிகள் அவரை தேசிய தலைவராகவும் உயர்த்தியிருக்கிறது.
1980-ல் இந்திராகாந்தி தமிழகம் வந்தபோதும், 2004-ல் சோனியாகாந்தி வந்தபோதும், நாட்டுக்கு நல்லாட்சி தருமாறு கருணாநிதி அழைத்தார். அவர் அழைத்தவாறு நல்லாட்சி அமைந்தது. ஆனால் இப்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில உரிமைகளை பறிக்கும் ஆட்சியாக உள்ளது.
இந்த விழா மேடையின் பின்னால் புனித ஜார்ஜ் கோட்டை படம் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆட்சி, திமுக ஆட்சி தான். மதச்சார்பற்ற மக்களாட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. அவர் வழி வந்த ஸ்டாலின், தேசிய அளவில் மதச்சார்பற்ற நல்லாட்சி வழங்க பாடுபட வேண்டும்.
இங்கு கூடியுள்ள தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மதச்சார்பற்ற மக்களாட்சியை திமுக வழங்க வேண்டும். திமுக எம்பிக்கள் திருச்சி சிவாவும், கனிமொழியும், பாராளுமன்றத்தில் மாநில உரிமை பாதுகாப்பு மசோதா ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று காதர் மொய்தீன் கூறினார்.