திருந்துவதற்கான சூழல் இல்லாமல் கூர்நோக்கு இல்லங்களில் அடைத்து வைக்கப்படுவதால் அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் சிதைக் கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் செயல் படும் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப் பட்டுள்ள சிறுவர்களில் இரு தரப்பினரிடையே கடந்த 11-ம் தேதி மோதல் ஏற்பட்டது. டியூப் லைட், கற்கள், கட்டை உள்ளிட்ட பொருட் களைக் கொண்டு ஒருவரையொருவர் சரமாரி யாக தாக்கிக் கொண்டனர். பின்னர் 33 சிறு வர்கள் சுவர் ஏறி தப்பிச் சென்றனர். இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிறைவாசிகள் உரிமைகள் மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புக ழேந்தி கூறும்போது, “தற்போதைய சூழலில் சிறுவர்கள் திருந்துவதற்கான பயிற்சி கூடமாக கூர்நோக்கு இல்லங்கள் இல்லை. குற்றம் செய்தார்கள் என்று கூறி சிறைச்சாலையில் வைப்பதுபோல் அவர்களை அடைத்து வைத் துள்ளனர். அவர்களின் கோபம் மற்றும் குற்ற உணர்வை நீக்கி முறையான உளவியல் ஆலோசனையையும், கல்வியையும் கொடுத் தால்தான் அவர்கள் திருந்தி வருவார்கள். ஆனால், கூர்நோக்கு இல்லங்களில் கூடுத லான மன உளைச்சலுக்கு அவர்கள் உள்ளாக் கப்படுகின்றனர். குற்றவாளி என்ற மன நிலையிலேயே அதிகாரிகள் அவர்களை அணுகுகின்றனர். மனிதாபிமானத்தோடு அணுகு வதில்லை. சிறுமிகள் நடத்தப்படும் விதம் இன்னும் மோசம்” என்றார்.
மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் அ.நாராயணன் இதுகுறித்து கூறியதாவது:
பள்ளிகளிலிருந்து இடைநின்றவர்கள், குழந் தைத் தொழிலாளர்களாக மாறியவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் மற்றும் தெருவோரம் வசிக்கும் சிறுவர்கள் சிறு குற்றங் களில் ஈடுபட்டு கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மற்ற குற்றவாளி களைப் போல் இந்தச் சிறுவர்களையும் காவல் துறையினர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இந்த சிறுவர்கள் மீது வன்முறை திணிக்கப் படும்போது, அவர்களும் வன்முறையாளர்களாக மாறுகின்றனர்.
கூர்நோக்கு மையங்களுக்கு அனுப்பப்படும் சிறுவர்களுக்கு சிறார் நீதி சட்டத்தின்படி உடனடி இலவச சட்ட உதவி கிடைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோருக்கு அப்படி கிடைப் பதில்லை. சமூக பாதுகாப்புத்துறை தலைமை யகம் கெல்லிஸ் கூர்நோக்கு மைய வளாகத் தில்தான் உள்ளது. ஆனால், வாரம் ஒருமுறை கூட உயர் அதிகாரிகள் அங்குள்ள சிறுவர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக கிடைக் கிறதா என்று கேட்பதில்லை. மேலும், கூர்நோக்கு இல்ல வளாகத்தில் தங்கி, கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிடவேண்டும் என்பன போன்ற விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன.
பணியிடங்கள் காலி
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங் களை நிரப்ப வேண்டும், மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. போதைக்கு அடிமையான சிறார்களுக்கான போதை மறுவாழ்வு மையம் வேண்டும் என 2,013 இளம் சிறார் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. இதுபற்றி கேட்டால் இளம் சிறுவர்களுக்கு போதை மறுவாழ்வு பயிற்சி அளிக்கும் நிபுணர்கள் இல்லை என்கிறார்கள். பல காப்பகங்களில் கண்காணிப்பாளர் பணியிடங்கள், தொழிற்பயிற்சி அளிப்பவர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
தமிழகத்தில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்காலம் முடிந்து 6 மாதங்களாகின்றன. நீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பிறகும், இன்னமும் அந்த பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
கூர்நோக்கு இல்லங்களில் உள்ள குறைபாடுகள் நீங்க வேண்டுமெனில் நீதிமன்ற உத்தரவையும், சிறார் நீதிக்குழு பரிந்துரைகளையும் உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், சிறார் கூர்நோக்கு இல்லங்களில் தற்போதுள்ள சூழலால் அவர்கள் எதிர்காலத்தில் பெரும் குற்றவாளிகளாக மாறுவார்களே தவிர, அவர்கள் திருந்தி, மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்பற்றப்படாத விதிமுறைகள்
மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் கூறும்போது, “கூர்நோக்கு இல்லங்களில் முறையான கண்காணிப்பு, கவனிப்பு இருந்தால் வன்முறைச் சம்பவங்கள் நடக்காது. சிறிய குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லங்களில் அடைத்து வைக்கின்றனர். அங்கு, வயது அதிகமுள்ள சிறுவர்கள், இளம் சிறுவர்களை சித்ரவதை செய்யும் சூழலும் உள்ளது. தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறை அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில்தான் கெல்லிஸ் அரசு கூர்நோக்கு இல்லம் அமைந்துள்ளது. அங்கிருந்து பல முறை சிறார்கள் தப்பிச் சென்றுள்ளனர். தனது வளாகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தையே கவனிக்க முடியாத அவலநிலையில் அந்தத் துறை உள்ளதை தொடர் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன” என்றார்.