கோவை - பொள்ளாச்சி சாலையில் அசுர வேகத்தில் சென்று பலரையும் அச்சத்தில் உறைய வைத்த இரு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 25 தனியார் பேருந்துகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை - பொள்ளாச்சி இடையேயான தேசிய நெடுஞ்சாலை (209) ரூ.414 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆச்சிப்பட்டியில் இருந்து கோயில்பாளையம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி வரை இந்த பணிகள் நடக்கின்றன. குறுகலான இடத்தில் சாலையை அகலப்படுத்தி, நீர்வழிப்பாதைகளில் சிறு பாலங்கள் கட்ட, கிணத்துக்கடவில் மேம்பாலம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறுகலான சாலையில் வேகமாக இயக்கப்பட்டு வந்த வாகனங்களால் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. இதைத் தடுக்க 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டால் சீரான போக்குவரத்தும், விபத்துகள் இல்லாத சூழலும் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு கோவை, பொள்ளாச்சி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நம்பிக்கையை குலைக்கும் விதமாக, சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கும்போதே, மிகவும் ஆபத்தான, சாகசப் பயணங்களை தனியார் பேருந்துகள் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஈச்சனாரி முதல் ஆச்சிப்பட்டி வரை சாலை விரிவாக்கம் செய்வதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் இருபுறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 25 அடி அகலத்துக்கான பழைய சாலையிலேயே அனைத்து ரக வாகனங்களும் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. சிறிது தவறினாலும் வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் லாபப் போட்டியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் சில தனியார் பேருந்துகள், ஆபத்தான, குறுகலான, பணிகள் நடக்கும் சாலை என்றும் பார்க்காமல், கண்மூடித்தனமாக இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி சாலையில் செல்லும் தனியார் பேருந்துகளின் அத்துமீறலை அப்பட்டமாக காட்டும் விதமாக, கோவையைச் சேர்ந்த சம்பத் என்பவர் செல்போன் மூலம் படம் பிடித்து நேற்று முன்தினம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அதில், இரு கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் செல்லும் இரு தனியார் பேருந்துகள், ஒன்றையொன்று முந்திச் செல்லும் நோக்கில் போட்டிபோட்டுக் கொண்டு அசுர வேகத்தில் செல்வது பதிவாகியிருந்தது. எதிரே வரும் வாகனங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், சாலையிலும், சாலையோர கட்டுமானப் பகுதிகளிலும் தறுமாறாக அந்த பேருந்துகள் செல்வதும், அதனால் மற்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதும் வீடியோ மூலம் தெரியவந்தது.
இந்த வீடியோ பதிவுகள் பரவியதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், தானே முன்வந்து இரு பேருந்து ஓட்டுநர்கள் மீதும் நேற்று நடவடிக்கை எடுத்தார். பயணி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பேருந்து ஓட்டுநர்களான நாகராஜ் (41), வைரமுத்து (42) ஆகியோர் மீது பொள்ளாச்சி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், போலீஸாரும் வேகமாகச் செல்லும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நேற்று மாலை நிலவரப்படி, கோவை - பொள்ளாச்சி சாலையில் வேகமாக பயணித்ததாக 17 தனியார் பேருந்துகளை கிணத்துக்கடவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதேபோல பொள்ளாச்சி - உடுமலை சாலையில் 6 பேருந்துகளை கோமங்கலம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பல வருடங்களாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள், ஒரு வீடியோ காட்சி பதிவு செய்த பிறகே, ஒரே நாளில் 25 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலம் தாழ்ந்த நடவடிக்கையாக இருந்தாலும், இதை மக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
போலீஸார் தரப்பில் கூறியதாவது: வழக்கமாக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால் முழுவீச்சில் மேற்கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்ட 2 பேருந்து ஓட்டுநர்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக வேகம் கண்டறியப்பட்ட மற்ற பேருந்துகள் மீதும் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 42 கி.மீட்டர் தொலைவைக் கடக்க ஒவ்வொரு பயணிகள் பேருந்துக்கும், பயண நேரமாக 60 நிமிடங்களை வட்டாரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர். ஆனால், கூடுதல் பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக நகரப் பகுதியில் அதிக நேரத்தை செலவிட்டுவிட்டு, மீதமுள்ள தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க முயற்சிக்கின்றன தனியார் பேருந்துகள். இதுவே விதிமீறலுக்கும், விபத்துகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது என்றனர்.
கிணத்துக்கடவில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேருந்துகள்.
விபத்துகள் குறைவு
பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘மக்கள் புகாருக்கு காத்திருக்காமல் எனது சொந்த புகாராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் பதிவான பேருந்து நிறுவனங்கள், பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் 2-ம் தேதி காலை பேருந்து உரிமையாளர்கள், வட்டாரப் போக்குவரத்து கழகம் அடங்கிய ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பொள்ளாச்சி - கோவை சாலையில் இதுபோன்ற பிரச்சினைகள் அதிகமாக நடப்பதால் 2 வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மூலம் கண்காணித்து வருகிறோம்.
பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பிரச்சினைகளைத் தவிர்க்க பிப்ரவரி முதலே நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கெனவே 3 ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். இந்தச் சாலையில் கடந்த பிப்ரவரியில் 12 விபத்துகள் நடந்தன. அது மார்ச்சில் ஐந்தாகவும், ஏப்ரலில் ஒரு விபத்தாகவும் குறைந்துள்ளது. சாலை விரிவாக்கம் முடிந்தாலும் தொழில்நுட்ப ரீதியில் போக்குவரத்து பிரச்சினைகளை தடுக்க முடிவு செய்துள்ளோம். விதிமீறலில் ஈடுபட்டால் எச்சரிக்கை கொடுப்பதோடு நிற்காமல் உடனே கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.