‘‘அகழ்வாராய்ச்சி குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என தமிழக அரசு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) டி.கே.ராமச்சந்திரன் கூறினார்.
மாநில தொல்லியல் துறை மற்றும் சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தும் சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த 5 நாள் கருத்தரங்கு நேற்று சென்னையில் தொடங்கியது. தொல்லியல் துறை ஆணையர் டி.ஜகந்நாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை தலைவர் ஆர்.ரங்கராஜ் முன்னிலை வகித்தார். தமிழக அரசு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) டி.கே.ராமச்சந்திரன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
அகழ்வாராய்ச்சிகள் மூலம் ஏராள மான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. ஆனால், அவற்றின் விவரங்களை ஆவணப்படுத்தி முறையாக பாதுகாக்கப்படுவதில்லை. இதனால், அவற்றை எங்கு கண்டுபிடித்தோம், எந்த நூற்றாண்டை சேர்ந்தது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. அண்மையில் கூட பிரத்யங்கரா தேவி சிலை வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால், அந்த சிலை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த ஒரு பொருளை கூட ஆவணப்படுத்தி அதுபற்றிய விவரங்களை குறிப்புகளாக அச்சடித்து அருங்காட்சியகங்களில் வைத்துள்ளனர்.
அகழ்வாராய்ச்சி குறித்து பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு கலாச்சார அட்லஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் பகுதியில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கும் பொருட்களை அவர்களே ஆவணப்படுத்தி வைக்க முடியும்.
நம் நாட்டு கலாச்சாரம், பாரம்பரிய விஷயங்கள், நாட்டியம், இசை உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். எனவே நாம் பாரம்பரிய விஷயங்களை பாதுகாக்க ஊக்குவிப்பதன் மூலம் நமக்கு வருவாயும் கிடைக்கும்.
இவ்வாறு டி.கே.ராமச்சந்திரன் கூறினார்.
நிகழ்ச்சியில் பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வுக் குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.