தமிழகம்

மழையால் பழுதான சாலைகளை சீரமைக்கும் பணி 2 நாளில் முடியும்: மேயர் சைதை துரைசாமி உறுதி

செய்திப்பிரிவு

சென்னையில் மழையால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி இன்னும் 2 நாளில் முடிவடையும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று நடந்த மன்றக் கூட்டத்தில் மேயர் பேசியதாவது:

சென்னையில் நான்கு நாட்களில் 40 செ.மீ. மழை பெய்துள்ளது. ஒரே நேரத்தில் மழை கொட்டித் தீர்த்ததால், சாலைகளில் நீர் தேங்குகிறது. ஆனால், எந்த இடத்திலும் 3 அல்லது 4 மணி நேரத்துக்குமேல் நீர் தேங்க விடாமல் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நகரில் உள்ள 33,353 சாலைகளில் 100-க்கும் குறைவான சாலைகளில் மட்டுமே 3 மணி நேரத்துக்குமேல் நீர் தேங்கியிருந்தது.

கடந்த 21-ம் தேதி 443 இடங்களிலும், 23-ம் தேதி 1,222 இடங்களிலும் சாலைகள் சீரமைக்கப்பட்டன. மீதமுள்ள பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிக்கப்படும்.

அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான அதிகாரி, மழைநீர் வடிகால் பணியை படம் எடுத்து மாநகராட்சி இணையதளத்துக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் பணி முடிந்ததாக பதிவு செய்யப்படும்.

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் சென்னையின் பல இடங்களில் மண், குப்பை, தூசி சேர்கிறது. இதனால் ஏற்படும் சிரமங்களையும் தாங்கிக் கொண்டுதான், மழை நேரத்தில் சாலைகளை மாநகராட்சி சுத்தம் செய்கிறது.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார்.

SCROLL FOR NEXT