சுனாமி முன்னெச்சரிக்கை தொழில்நுட்ப ஏற்பாடுகளில் உலகளவில் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது என்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலாளர் டி.ராமசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், இந்திய புவிகாந்த நிறுவனமும், பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: `கடந்த 2004-ம் ஆண்டில் இந்தியாவில் சுனாமி தாக்கியபோது அதை எதிர்கொள்ளவும், அதுகுறித்து மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் இந்தியா தயாராக இருக்கவில்லை. ஜப்பானில் உள்ளவர்களுக்கு தெரிந்த அளவுக்கு நமக்கு அது குறித்து தெரியவில்லை. சுனாமி என்ற வார்த்தைகூட அப்போது புதிதாக இருந்தது.
இப்போது சுனாமி குறித்து முன்னெச்சரிக்கை செய்வதில் நாம் முன்னோடியாக இருக்கிறோம். கடந்த 2007-ம் ஆண்டில் இதற்காக விரிவான ஒரு திட்டத்தை செயல்படுத்தினோம். வங்கக்கடல், அரபிக்கடல், இந்துமா பெருங்கடல் என்று இந்தியாவை சுற்றிலுமுள்ள கடற்பகுதியில் நிலத்துக்கடியில் உரிய உபகரணங்களை வைத்திருக்கிறோம்.
நிலத்துக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டால் அதுகுறித்து உடனுக்குடன் நமது செயற்கை கோள்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அங்கிருந்து எச்சரிக்கை குறித்த தகவல்கள் முக்கிய அரசுத்துறைகளுக்கு கிடைக்கும்.
கடலுக்கடியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டு சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் இருந்தால் அது குறித்து 13-வது நிமிடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகும் வகையிலான நவீன தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. இதில், உலகளவில் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மேலும், நாட்டிலுள்ள வானிலை ஆய்வு மையங்கள், அது தொடர்பான ரேடார் போன்ற உபகரணங் கள் உள்ளிட்டவற்றை நவீனப்படுத்தும் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.950 கோடியை ஒதுக்கியிருக்கிறது ’ என்றார்.