தமிழகம்

பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களையும் கல்லூரி படிப்புகளில் சேர்க்கும் சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி

வி.தேவதாசன்

இன்று பொன்விழா கொண்டாட்டம்

10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி; தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித் தரம்; படிப்பைப் போலவே விளையாட்டுக்கும் அதிக முக்கியத் துவம்; பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் உயர் கல்வி படிக்க வழிகாட்டுதல்…

கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சா.பூல்சந்த் வீர்சந்த் அரசு மேல்நிலைப் பள்ளி இத்தகைய பல சிறப்புகளோடு இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 42 பேர் பங்கேற்றனர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 56 பேரும் வெற்றி பெற்றனர்.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் மாலை 2 மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பசி யால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் மாலை நேரங்களில் ஆசிரி யர்கள் சிற்றுண்டி வழங்குகிறார்கள்.

கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள சா.பூல்சந்த் வீர்சந்த் அரசு மேல்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டை முன்னிட்டு கட்டப்பட்டுள்ள பொன்விழா வளைவு.

தமிழ் வழி தவிர ஆங்கில வழி வகுப்புகளும் உள்ளன. ஆங்கில மொழித் திறனை வளர்க்க கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக இந்தப் பள்ளியில் ஆங்கில மொழி ஆய்வகம் செயல்படுகிறது. கபடி, கிரிக்கெட், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் இந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

பள்ளியின் செயல்பாடுகள் பற்றி தலைமை ஆசிரியர் வி.சரவணன் மேலும் கூறியதாவது:

எங்கள் பள்ளி மாணவர்களில் பெரும் பாலானோர் ஏழைகள். அவர்களின் வீடுகளில் மாணவர்களின் படிப்பு மீது உரிய கவனம் இருக்காது. ஆகவே, பெற்றோர் செலுத்த வேண்டிய கவனத் தையும் சேர்த்து நாங்களே கவனிக்க வேண்டும். மாணவர்கள் 99 சதவீதம், 98 சதவீதம் என அதிக மதிப்பெண்களை எடுக்க வைக்க வேண்டும் என்பது எங்கள் பிரதான நோக்கம் அல்ல. ஏழை மாணவர்கள் பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேறி விடாமல் தடுப்பதுதான் பிரதான நோக்கம். அவர்கள் 60 சதவீதம், 70 சதவீதம், 80 சதவீதம் என்ற அளவில் மதிப்பெண்கள் பெற்று பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை செலுத்துகிறோம்.

அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மட்டுமே நாங்கள் உரு வாக்கவில்லை. அறம் சார்ந்த வாழ்க் கையை ஒருவர் வாழ வேண்டுமானால், அதற்கான பயிற்சிகள் பள்ளிகளில்தான் தரப்பட வேண்டும். உயர்ந்த வாழ்வியல் நெறிகளை எங்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறோம். 50 சதவீதம், 60 சதவீதம் மதிப்பெண்களோடு பள்ளிப் படிப்பை முடித்து செல்லும் மாணவர் களால்கூட வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அதற்கான பயிற்சி இங்கே தரப்படுகிறது.

பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், கட்டாயம் உயர் கல்வியையும் முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பிறகு எல்லா மாணவர்களையும் கூட்டி பேசுகிறோம். அனைவரும் கல் லூரிகளில் சேர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். என்னென்ன படிப்புகளை தேர்வு செய்யலாம் என ஆலோசனைகள் வழங்குகிறோம்.

பொருளாதார சூழல் காரணமாக உயர் கல்வி வகுப்புகளில் சேர முடி யாத மாணவர்களை பள்ளிக்கு வர வழைக்கிறோம். முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தி, அவர்கள் கல்லூரி படிப்பில் சேருவதை உறுதி செய்கிறோம். உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் எங்கள் பழைய மாணவர்கள் சுமார் 60 பேர் இதற்கு நிதியுதவி செய்கின்றனர். இந்த ஆண் டில் பிளஸ் 2 முடித்த 56 மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். பெரும்பாலானவர்கள் கலை, அறிவியல் படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு பகுதி நேரமாக வேலைசெய்து, சுயமாக சம்பாதித்து படிப்பது பற்றியும் வழி காட்டுகிறோம். கல்லூரிகளில் சேர்ந்த பலர் காலை நேரங்களில் வீடுகளுக்கு செய்தித்தாள் போடுகின்றனர்; மாலை நேரங்களில் ஹோட்டல்களில் வேலை செய்கின்றனர்; இந்தப் பகுதியிலிருந்து மல்லிகைப்பூ தினமும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவிகள் பூ கட்டிக் கொடுத்து சம்பாதித்து, படிக் கின்றனர். இத்தகைய மாணவர்களை உருவாக்குவதுதான் எங்கள் பள்ளியின் மிகப்பெரிய வெற்றி என கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுத்திறன் மாணவி ப்ரீத்தி | தலைமை ஆசிரியர் சரவணன்

கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இந்தப் பள்ளியில் படித்த ப்ரீத்தி என்ற மாணவி 468 மதிப்பெண்கள் எடுத்தார். இவர் உடல் வளர்ச்சி குறைந்த மாற்றுத் திறனாளி. இவரால் நடக்க முடியாது. தினமும் இவரது தாயார்தான் பள்ளிக்கு தூக்கி வருகிறார். உடல் வளர்ச்சி குறைவின் காரணமாக செய்முறைத் தேர்வுகளை உள்ளடக்கிய அறிவியல் பிரிவு பாடங்களில் இவரால் 11-ம் வகுப்பில் சேர முடியாத நிலை. இந்தப் பள்ளியிலோ செய்முறைத் தேர்வுகள் இல்லாத பாடப் பிரிவுகள் இல்லை. இதே பள்ளியில்தான் படிக்க வேண்டும் என ப்ரீத்தி விரும்பினார். பரீத்தியின் நிலை குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு ஆசிரியர்கள் கொண்டு சென்றனர்.

இந்த ஒரேயொரு மாணவியின் நலன் கருதி செய்முறைத் தேர்வு இல்லாத கணிதவியல் பாடப் பிரிவை தொடங்க அனுமதி கிடைத்தது. இப்போது ப்ரீத்தி மகிழ்ச்சியாக படித்து வருகிறார். இவருடன் மேலும் 4 மாணவர்கள் இந்தப் பாடப் பிரிவில் படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரின் நலனிலும் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் காட்டும் அக்கறைக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.

இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட இந்தப் பள்ளி 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளி தொடங்கப் பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி பள்ளியின் பொன் விழா கொண்டாட்டங்கள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகின்றன.

“தரமான கல்வி, சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் இந்த அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. எனினும் 26 ஆசிரி யர்கள் பணியாற்றும் எங்கள் பள்ளியில் 352 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி தொடங்கப்பட்டபோது இருந்த பஸ் வசதியே இன்று வரை தொடர்கிறது. எங்கள் பள்ளியின் வழியாக பஸ் போக்குவரத்தை அதிகப்படுத்தினால், இன்னும் பல ஏழை மாணவர்களுக்கு எங்கள் பள்ளியின் சேவை கிடைக்கும். இந்த பொன்விழா ஆண்டில் எங்களது மிக முக்கிய கோரிக்கை இதுதான்” என்கிறார் தலைமை ஆசிரியர் சரவணன்.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 94421 70404

SCROLL FOR NEXT