ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்ல மக்கள் நேற்று ஆர்வமாக புறப்பட்டு சென்றனர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நகரங்களில் வேலைவாய்ப்பு, சிறந்த கல்வி நிறுவனங்கள் என பல்வேறு வசதிகள் இருப்பதால் நகரங்களுக்கு ஏராளமானோர் குடிபெயர்ந்துள்ளனர். முக்கியமான பண்டிகை, தொடர் விடுமுறைக் காலங்களில் அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி இதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. மேலும் 6-ம் தேதி பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்று மாலை 4 மணி முதலே சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவியத் தொடங்கினர்.
ரயில் நிலையங்களில் ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும், முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 100 பேர் செல்ல வேண்டிய ஒரு ரயில் பெட்டில் 300-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இதேபோல், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் நேற்று மாலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்தது. மக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்டவை சார்பில் சுமார் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இது தொடர்பாக போக்குவரத்து துறையின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால், மக்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். எனவே, அவர்களின் வசதிக்காக கூட்டம் வரவர, சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல், தாம்பரத்தில் இருந்தும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், மக்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பும்போது, இதே அளவுக்கு சிறப்பு பஸ்களை இயக்குவோம்’’ என்றனர்.
அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் சிரமம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் வரை காலதாமதம் ஆனதால் பயணிகள் அவதிப்பட்டனர்.