சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளன்று நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கையை வீடியோ ஆதாரங்களுடன் ஆளுநர் அலுவலகத்தில் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் நேரில் அளித்தார்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். ஆளுநர் உத்தர வின்பேரில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு,பெரும்பான்மையை நிரூபிப்பதற் காக கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது எம்எல்ஏக்கள் தொகுதி மக்களை சந்தித்து விட்டு வந்து வாக்களிக்கச் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரினார். இதை, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சி எம்எல் ஏக்களும் வலியுறுத்தினர். ஆனால், பேரவைத் தலைவர் ஏற்கவில்லை. திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், பேரவைத் தலைவர் உத்தரவின்பேரில் திமுக எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றனர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களின் சட்டை கிழிந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபின், அவையில் வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவையில் நடந்த நிகழ்வுகளை விளக்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக எம்.பி.க்களும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இந்த புகார்களின் அடிப்படை யில், சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து அறிக்கை அனுப்பும்படி, பேரவைச் செயலாளர் ஜமாலுதீனுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அதன்பின், மும்பைக்கு சென்ற ஆளுநர், 18-ம் தேதி அவை கூடியது முதல் முடிவடையும் வரை நடந்த நிகழ்வுகளுக்கான வீடியோ பதிவுகளுடன் விரிவான அறிக்கை ஒன்றை உடனடியாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
ஆளுநரின் திடீர் உத்தரவால், சட்டப்பேரவைச் செயலகம் பரபரப்பானது. பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை ஆலோசனை நடத்தினர். அதன்பின், விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது. அத்துடன் வீடியோ பதிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. இதையடுத்து, நேற்று மதியம் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன், ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தார். இந்த அறிக்கை, இ-மெயில் மூலம் மும்பையில் உள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.