மக்கள் நலக் கூட்டணியைக் கண்டு அதிமுக, திமுகவுக்கு அச்சம் ஏற் பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித் துள்ளார்.
மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் போதிய அக்கறை காட்டவில்லை என மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரைக் கண்டித்து கோஷமிட்டனர்.
பின்னர் வைகோ பேசியதாவது:
தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணி களில் மத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை. மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், போதுமான நிதி அறிவிக்காமல் பிரதமர் மோடி தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். மக்கள் நலக் கூட்டணியை ஒரு மாற்று சக்தியாக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு வைகோ கூறினார்.