தமிழகம்

வெயிலால் களையிழந்த தமிழக சுற்றுலாத் தலங்கள்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை உட்பட தென் மாவட் டங்களில் வழக்கத்துக்கு மாறாக கோடை வெயில் கொளுத்துவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தென் தமிழகத்தில் மதுரையை மையமாகக்கொண்டு கொடைக் கானல், பழநி, ராமேசுவரம், கன்னி யாகுமரி மற்றும் குற்றாலம் உள் ளிட்ட சுற்றுலாத் தலங்கள் செயல் படுகின்றன. ஆண்டு முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா நிறுவனங்கள் மூலமும், தனியாகவும் இந்த சுற் றுலாத் தலங்களுக்கு வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த 2 ஆண்டாக மாறுபட்ட தட்பவெப்ப நிலை, தண்ணீர்த் தட்டுப்பாடு, நிலச் சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏற்பட்ட அச்சத்தால் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்தது. பழநியில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்ற னர். ராமேசுவரம், கன்னியா குமரியில் சுகாதாரச் சீர்கேடு, வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.

குற்றாலத்தில் தற்போது மழை இல்லாமல் அருவிகள் வறண்டு கிடப்பதால், சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப் படுகிறது. மதுரையில் காந்தி அருங் காட்சியகம், மாரியம்மன் தெப்பக் குளம், திருமலை நாயக்கர் மகால், மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் ஆகிய சுற் றுலாத் தலங்களைத் தவிர ஆண்டு தோறும் இங்கு நடக்கும் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா, அலங் காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை காண ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவர். ஜல்லிக்கட்டு கடந்த 3 ஆண்டாக நடக்கவில்லை. இந்த ஆண்டு பெரும் போராட்டத்துக்கு பிறகு அவசர கோலத்தில் ஜல்லிக் கட்டு நடந்ததால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வர ஆர்வம் காட்டவில்லை.

தற்போது கோடை சுற்றுலா தொடங்கியுள்ள நிலையில், தென் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகள் வருகை இல் லாமல் வெறிச்சோடி காணப்படு கின்றன. மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. அழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 6-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் மே 10-ம் தேதி நடக்கிறது.

இந்த ஆண்டு, மதுரையில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் கொளுத்துகிறது. இதனால் கோடை சுற்றுலா களையிழந்துள் ளது. திருமலை நாயக்கர் மகா லுக்கு ஆகஸ்ட் முதல் மார்ச் வரை தினமும் குறைந்தது 300 வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளாவது வருவார்கள். தற்போது 10 வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தாலே அதிகம்.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குஜராத், கொல்கத்தா, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா, கர் நாடகா போன்ற வெளிமாநிலங் களில் இருந்தும், ஜெர்மன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத் தாலி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் மதுரை மற்றும் தென் மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த ஆண்டு அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண 92 வெளி நாட்டினர் வந்திருந்தனர். திருக்கல் யாணம், தேர்த்திருவிழாவைக் காண 126 பேர் வந்திருந்தனர். இந்த ஆண்டு அதற்கும் வாய்ப்பில்லை. குடிநீர் தட்டுப்பாடு, வழக்கத்துக்கு மாறான வெயில் போன்றவை முக்கிய காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, திருக்கல் யாணம், தேர்த்திருவிழாவை காண வரும் வெளிநாட்டினருக்கு தனி காலரி அமைக்க சுற்றுலாத் துறை மூலம் மாநகராட்சி, இந்து அறநிலையத் துறை நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பார்க்க ரம்மியமாக பரவசத்தை ஏற்படுத்தினாலும் சுற்றுலாப் பயணிகள் வருகையில்லாமல் வெறிச்சோடி காணப்படும் திருமலைநாயக்கர் மகால்.

மழை கைகொடுக்குமா?

மதுரைக்கு 2013-ம் ஆண்டு 90,84,367 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 92,631 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். 2014-ம் ஆண்டு 1,04,62,781 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 99,637 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். 2015-ம் ஆண்டு 1,26,35,737 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 88,279 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு 1.22 கோடி உள்நாட்டு பயணிகள் மற்றும் 89,448 வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மதுரையில் கடந்த சில வாரமாகவே 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது. இதனால், இந்த கோடை சீஸனில் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை. கோடை மழை பெய்தால் இந்த நிலை மாற வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT