வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகி மதனை கண்டுபிடித்து ஆஜர்படுத்துவதற்கு காவல் துறைக்கு 2 வார காலஅவகாசம் அளித்து சென்னை உயர் நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.
திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த வேந்தர் மூவிஸ் நிர்வாகி மதன், கடந்த மாதம் 28-ம் தேதி திடீ ரென காணாமல் போனார். தனது மகனை கண்டுபிடித்து ஆஜர் படுத்த உத்தரவிடக் கோரி அவரது தாய் ஆர்.எஸ்.தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமான மாணவர்கள், பெற்றோரிடம் மதன் பணம் வசூலித்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மதன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேர்மையான காவல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை ஏற்று, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணனை மாநகர காவல் ஆணையர் நியமித் தார். இதையடுத்து மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி ராதாகிருஷ் ணனுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் துணை ஆணையர் ராதா கிருஷ்ணன் நேரில் ஆஜராகி, விசா ரணை அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
கூடுதல் துணை ஆணையர் சமர்ப்பித்த மனுவை படித்துப் பார்த்தோம். அவரிடம் நேரில் சில விளக்கங்களையும் கேட்டோம். அவரது விசாரணையில் முழு திருப்தி இருக்கிறது. சரியான கோணத்தில் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். மதனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும், அறிக்கை தாக்கல் செய்யவும் 4 வாரம் அவகாசம் கோரியுள்ளார். 2 வாரம் அவகாசம் அளிக்கிறோம். விசாரணை ஜூலை 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.