தமிழகம்

திமுக - அதிமுக ஆட்சி சாதனைகளை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - மேயருக்கு மா. சுப்பிரமணியன் கேள்வி

செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக் காலத்திலும் அதிமுக ஆட்சியிலும் சென்னை மாநகராட்சி சார்பில் செய்த சாதனைகளை பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா? என்று மேயர் சைதை துரைசாமிக்கு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 25-ம் தேதி நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் துரைசாமி, மு.க.ஸ்டாலினும் நானும் மேயராக இருந்தபோது மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங் களுக்கு செலவிட்ட தொகையைக் காட்டிலும், இவர் மேயராக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் அதிகமாக செலவிட்டுள்ளதாக தனக்குத்தானே புகழாரம் சூட்டிக் கொண்டார்.

மு.க.ஸ்டாலினும், நானும் மேயராக இருந்த நேரத்தில் ஆற்றிய பணிகள் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரை, அலு வலகக் கட்டிடங்கள், கலையரங்கங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், தொற்று நோய் மருத்துவமனையில் 200 படுக்கைகள் மற்றும் ஆய்வரங்கம் உள்ளடக்கிய கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நிலங்கள், பல்வேறு சமூகநலத் திட்டங்கள் என எல்லாம் கண்ணுக்கெதிரே காட்சிகளாய் இருக்கின்றன.

ஆனால் மேயர் துரைசாமியின் 3 ஆண்டுகால நிர்வாகத்தில், ஏதேனும் ஒரு திட்டம் தீட்டி, மதிப்பீடுகள் தயாரித்து, ஒப்பந்தம் விட்டு, பணி ஆணையாருக்கேனும் வழங்கப்பட்டிருக்கிறதா? திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களையெல்லாம், தனது 2 ஆண்டு சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார்.

சென்னை மாநகர மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மேயர் துரைசாமி ஆற்றியுள்ள பணிகளையும், திமுக ஆட்சியின்போது ஸ்டாலினும் நானும் செய்த சாதனைகளையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா? எங்கே, எப்போது என்ற விவரத்தை உடனடியாக மேயர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT