அமெரிக்க ஆயுதக் கப்பலில் கைது செய்யப்பட்ட 35 பேரின் ஜாமீனுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப் பித்துள்ளதை எதிர்த்து, ஜனவரி 3-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அன்சுமான் திவாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், அமெரிக்க தனியார் பாதுகாப்பு கப்பலான சீமேன் கார்டு ஓகியோ கப்பலில், கைது செய்யப்பட்ட 35 பேருக்கும் தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றம் வியாழக் கிழமை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, அவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டோம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அவர்களது ஜாமீன் உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலீஸார் ரகசியமாக மனுத் தாக்கல் செய்து இடைக்காலத் தடை பெற்றுள்ளனர். தடை கோரி மனு செய்யும்போது, எதிர்மனுதாரருக்கு அரசு வழக்கறிஞர் மற்றும் மனுதாரர் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தடை பிறப்பித்த பிறகே எங்களுக்கு தெரியவந்தது.
இந்த வழக்கில் தூதரகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனக் கோரியிருப்பது அர்த்தமற்றது. ஒரு நபர் வெளிநாடு செல்ல அனுமதி கோரினால் மட்டுமே தூதரக உத்தரவாதம் தேவை. இந்த வழக்கை பொறுத்தவரை அவர்களை தூத்துக்குடியில் தங்கி யிருந்து தினமும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது பாஸ்போர்ட் களும் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
உத்தரவாதம் தேவையில்லை
மேலும், இந்த வழக்கில் வெளி நாட்டினர் மட்டுமின்றி இந்தியர்களும் உள்ளனர். அவர்களுக்கு தூதரக உத்தர வாதம் தேவையில்லை. இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வரும் 3-ம் தேதி மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். அப்போது எங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.
கப்பல் நிறுவனத்துக்காக ஆஜ ராகும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் ஏ.கே.ஜவஹர், செல்வின் அப்போது உடனிருந்தனர்.
ஹோட்டலில் தடை
முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, தான் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அன்சுமான் திவாரி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், திடீரென ஓட்டல் நிர்வாகம், அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து ஓட்டலுக்கு எதிரே சாலையோரம் நின்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இது பற்றி அவர் குறிப்பிடுகை யில், இந்த நடவடிக்கைக்கு கியூ பிரிவு போலீஸாரின் நெருக்கடிதான் காரணம் என்றார்.