முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் மீதான நில அபகரிப்பு புகார் தொடர்பாக, அ.தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கே.வி.ராமலிங்கத்தின் பெயர் சேர்க்கப் படவில்லை.
ஈரோடு மாவட்டம் 46 புதூர் கருக்கம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர், கடந்த நவம்பர் மாதம் 27-ம்தேதியன்று, ஈரோடு எஸ்.பி. பொன்னியிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘எனக்கு 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் 3232 சதுர அடி அளவில் வீடு உள்ளது. இந்த வீட்டை மிரட்டி வாங்குவதற்காக அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் அடியாட்கள் செந்தில்ராஜன் மற்றும் புதூர் ஊராட்சித் தலைவர் பிரகாஷ் ஆகியோர், என்னை காரில் கடத்திச் சென்று, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ராஜனின் வீட்டில் அடைத்து வைத்தனர்.
எனது வீடு, நிலம் ஆகியவற்றை தான் சொல்பவருக்கு விற்க வேண்டுமென கே.வி.ராமலிங்கம் மிரட்டினார். அதன்படி, என்னிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டனர். என்னை மிரட்டி எனது சொத்துக்களை எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராமலிங் கத்தின் அமைச்சர் பதவி பறிப்பு சம்பவம் நடந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தை நாடப்போவதாக முத்துசாமி தெரிவித்தார். இதையடுத்து ஈரோடு நில அபகரிப்பு தடுப்புப் பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர். செந்தில்ராஜன், பிரகாஷ், இளங்கோ ஆகிய மூவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், முத்துசாமி புகாரில் குறிப்பிட்டிருந்த கே.வி.ராமலிங்கத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் புகார்தாரரான முத்துசாமியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.