அலங்காநல்லூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
டிஜிபி அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இளைஞர்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டு உரிமை கோரி போராடி வருகின்றனர். அலங்கா நல்லூரில் இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியுள்ள னர். அவர்களுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு தந்து கொண் டிருக்கிறார்கள். அங்கு போராட்டத் தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு உணவு வழங்கும் பொதுமக்களை தடுத்ததாகவும், அலங்காநல்லூர் மக்கள், வீட்டுக் காவலில் வைக்கப் பட்டது போன்ற கெடுபிடிகளில் காவல்துறை ஈடுபட்டதாகவும் வரும் செய்திகள் கவலை அளிப்பதாக இருக்கிறது.
விடிய விடிய போராட்டம் நடத் திய இளைஞர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஜன நாயக ரீதியில் போராட்டம் நடத் திய இளைஞர்களை ஏதோ கொடுங் குற்றம் புரிந்தவர்களை கைது செய்வதுபோல சுற்றிவளைத்து, இழுத்துச் சென்று கைது செய்தது வேதனை அளிக்கிறது. இதன்விளை வாக அலங்காநல்லூர் மக்களே கைது செய்யப்பட்டவர்களை விடு தலை செய்யக் கோரி போராட் டத்தில் குதித்துள்ளனர்.
ஏற்கெனவே அலங்காநல்லூரை அறிவிக்கப்படாத போர் பகுதியாக சித்தரித்து காவல்துறை சார்பில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இனியும் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு தடுத்து நிறுத்த வேண்டும். கைது செய்யப் பட்டுள்ள இளைஞர்களை உடனடி யாக விடுவித்து அலங்காநல்லூர் பகுதியில் அமைதி திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அலங்காநல்லூர் பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்கள் செல்ல ஏற்படுத்தப்பட்டுள்ள தடை யையும் உடனே விலக்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
பின்னர், டிஜிபி அலுவலகத் துக்கு வெளியே நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
சட்டம் - ஒழுங்கு சரியில்லாத காரணத்தால்தான் தமிழகத்தில் பதற்றமான நிலை நிலவுகிறது. இன்றைக்குகூட சென்னையில் பல இடங்களில் மாணவர்கள் போராட் டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது. இந்த நேரத்தில்கூட பொறுப்புள்ள அதிகாரியை பார்க்க வந்தால் அவரை (டிஜிபி) பார்க்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது என்பது வேதனைக்குரியது.
பீட்டாவின் செயல்பாடு தமிழர் களின் உணர்வை, கலாச்சாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு போகக்கூடிய நிலையில் இருக் கிறது. எனவே உடனடியாக இந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் தமிழர்களை விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான நடவடிக்கையாவது எடுக்க வேண்டும்.
பொன்.ராதாகிருஷ்ணன் எப்போது மத்திய அமைச்சர் ஆனாரோ, எப்பொழுதெல்லாம் சென்னை விமான நிலையம் வந்து இறங்குகிறாரோ அப்போதெல்லாம் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறும், நிச்சயமாக நடக்கும், உறுதியாக நடக்கும் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அந்த உறுதிமொழியின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மதுரை, அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தபின் வெளியேவரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்.