தமிழகம்

முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் நளினியின் வழக்கு முடித்துவைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அரசு பரிசீலிக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அதேநேரத்தில் நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டிய விடுதலை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு 1994-ம் ஆண்டு கொள்கை முடிவு எடுத்தது. அதன்படி, 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளி னியை முன்கூட்டியே விடுதலை செய்ய இயலாது” என்று தெரிவித்தது.

இவ்வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நளினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் வாதிடும்போது, “உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கும் இந்த வழக்குக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-ன்படி மாநில அரசுக்கும், பிரிவு 72-ன்படி மத்திய அரசுக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது. இதில் தலையிட முடியாது என்று வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், மேற்கண்ட சட்டப் பிரிவின் கீழ் நளினியை விடுதலை செய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக, குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவு 432-ன் கீழ் அவரை விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. இப்பிரிவின் கீழ் விடுதலை செய்ய வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர், தண்டனை வழங்கிய நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி, சிறைத் துறையின் நன்னடத்தை அதிகாரி ஆகியோரின் கருத்துகளைப் பெறுவதுடன், சிபிஐ விசாரித்த வழக்காக இருந்தால் மத்திய அரசின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவின் கீழ் நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சிப்பதால் மேற்கண்ட வர்களின் ஒப்புதலை பெற முயற்சித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், “இது தொடர் பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், நளினி வழக்கில் நீதிபதி எம்.சத்தியநாராணன் நேற்று அளித்த தீர்ப்பு வருமாறு:

மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இவ்வழக்கைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டப்படி தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட நேரிடும். ஆனால், அதுபோல ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட இயலாது. மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. இந்த கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம்ள உத்தரவிட முடியாது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு முடிவுக்கு வராத நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது.

அதனால் இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரும் மனு தாரரின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலிக்கும் உரிமை தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு உள்ளது.

இவ்வாறு நீதிபதி எம்.சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

SCROLL FOR NEXT