தமிழக பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கு, மொத்தமாக ரூ.768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், "2017-2018 ஆம் ஆண்டில் ரூ.85 கோடி செலவில் மீனவர்களுக்கென 5,000 வீடுகளைக் கட்டுவதற்கு இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மீன்பிடி தடைக் காலத்திலும், மீன்பிடி குறைவாக உள்ள காலத்திலும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும், குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் நிவாரண உதவி தொடர்ந்து வழங்கப்படும்.
தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், தமிழ்நாடு மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை 2,700 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
மீனவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று, விற்பனை வரியிலிருந்து விலக்களித்து, இயந்திர மீன்பிடிப் படகு ஒன்றிற்கு வழங்கப்படும் டீசலின் அளவை, ஆண்டு ஒன்றிற்கு 15,000 லிட்டரிலிருந்து 18,000 லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு ஒன்றிற்கு வழங்கப்படும் டீசலின் அளவை, ஆண்டு ஒன்றிற்கு 3,600 லிட்டரிலிருந்து 4,000 லிட்டராகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும்.
மேலும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு ஒன்றிற்கு லிட்டருக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவையும், ஆண்டு ஒன்றிற்கு 3,000 லிட்டரிலிருந்து 3,400 லிட்டராக இந்த அரசு உயர்த்தி வழங்கும்.
இதனால், அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு 28 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 18 படகுகள் சீர்செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு பாதிப்பிற்குள்ளானதைக் கருத்தில் கொண்டு, இதனால் பாதிக்கப்பட்ட 18 மீனவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் 90 இலட்சம் ரூபாயை, ஒரு சிறப்பு உதவியாக இந்த அரசு வழங்க ஆணையிட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு முதல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மற்றும் தேங்காய்ப்பட்டிணத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகாரிலும் மூன்று புதிய மீன்பிடி துறைமுகங்களைக் கட்டுவதற்காகவும், காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், பழையாறு, தூத்துக்குடி, மல்லிப்பட்டினம் மற்றும் சின்னமுட்டம் ஆகிய ஏழு இடங்களில் உள்ள துறைமுகங்களை விரிவுபடுத்தி, நவீனப்படுத்துவதற்காகவும் 1,105 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் 35 மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூரில் 113.90 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் 171.12 கோடி ரூபாய் செலவில் 2017-2018 ம் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
கடல் அரிப்பினால், கடலோர கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. கடலோரப் பாதுகாப்பிற்காக, மணல் நிரப்பப்பட்ட புவிசார் செயற்கை குழாய்களால் தயாரிக்கப்பட்ட நீரடி நீர்க்கால்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப மையம் வடிவமைத்துள்ளது. இத்தொழில்நுட்பத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலூர் - பெரியகுப்பம் கிராமத்தில், முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தொழில்நுட்பம், கடல் அலைகளிலிருந்து கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதுடன், மீன்வளத்தையும் அதிகரிக்கிறது. எனவே, நபார்டு வங்கி கடனுதவியுடன், அதிக கடல் அரிப்பு ஆபத்துள்ள பகுதிகளில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2017-2018 ஆம் ஆண்டில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத் துறைக்கு, மொத்தமாக 768 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.