தமிழகம்

கீழடி அகழ்வாய்வை முடக்க முயற்சி: பழ.நெடுமாறன் கண்டனம்

செய்திப்பிரிவு

கீழடி ஆய்வுப் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டுமானால் இடம் மாற்றப்பட்ட அதிகாரியை மீண்டும் அதே இடத்தில் நியமிக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் நகர்ப்புற நாகரீகத்திற்கான தடயங்கள் கண்டறியப்படவில்லை. ஆனால், கீழடியில் தொல்லியல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகர்ப்புற நாகரீகம் கண்டறியப்பட்டது.

சங்க காலத்தைச் சேர்ந்த சுமார் 300 நகரங்கள் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்திருப்பதை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்துள்ள சுடுமண் முத்திரைகளும், மேலும் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட தொல் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. வைகைக் கரை முழுவதிலும் குறைந்தது இன்னும் 15 ஆண்டுகள் வரை அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும் என தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது.

வெற்றிகரமான இந்த அகழ்வாராய்ச்சியை கடும் முயற்சியுடன் மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளரான அமர்நாத் ராமகிருட்டிணாவை பாராட்டுவதற்குப் பதில் அவரை தொலைதூரத்தில் உள்ள அசாமிற்கு மாற்றி இந்திய அரசு தண்டித்துள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வைகைக் கரை நாகரீகம் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் முழுமை பெறுமானால், தமிழர் நாகரீகத்தின் தொன்மை நிலைநிறுத்தப்பட்டுவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் இந்திய அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்ற ஐயம் எழுந்துள்ளது.

கீழடி ஆய்வுப் பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டுமானால் இடம் மாற்றப்பட்ட அதிகாரியை மீண்டும் அதே இடத்தில் நியமிக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT