தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது கவலை அளிப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''ஒரு தலை காதல் விவகாரத்தில் கரூரில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பெண் ஒருவர் வகுப்பறையிலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு எதிரான விருப்பங்களை நிராகரிப்பதற்கு கூட உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் சென்னை முதலிடம் வகிப்பது தெரிய வந்துள்ளது.
சிறார் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 2014-ல் 945 ஆக இருந்தது. அது தற்போது 1,483 ஆக ஆகியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. குற்றச் சம்பவங்களுக்கு சிறார்கள் கேடயமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன.
வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. ஓய்வு பெற்று வீட்டில் தனியாக இருக்கும் 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதியவர்கள் கொலையில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏடிஎம் மையத்துக்கு எடுத்து செல்லப்பட்ட ரூ.15 லட்சத்தை வழியிலேயே சிலர் கொள்ளை அடித்துள்ளனர். சுவாதி கொலை வழக்கின் முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படவில்லை. தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக ஆக்குவது அரசின் கடமை'' என்று தமிழிசை கூறியுள்ளார்.