எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு, இரு அணிகள் இணைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வந்த பின்பு தனது ஆதரவாளர்களுடன் தனித் தனியே பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலை அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் தனது வீட்டிற்கு அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்த விவரங்களை மூத்த நிர்வாகிகளுக்கு அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இரு அணிகள் இணைப்பில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு ஆதரவு?உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடதப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தியும் ஓபிஎஸ் அணி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கும் நிலையில் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது பொருத்திப் பார்க்கத்தக்கதாகும்.