கோவை, லிங்கப்ப செட்டி தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (41). தனது மகன் ஜெயகணேஷ் (18), தாய் கலாவதி மற்றும் தந்தை ராஜகோபால் ஆகியோருடன் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு நேற்று வந்தார்.
இவரது மகனது உடம்பில் பிளேடால் அறுபட்டது போன்று காயங்கள். அம்மாவின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு அலைந்தான்.
யாரையும் பொருட்படுத்தாமல் கால்சட்டையை அடிக்கடி அவிழ்ப்பது, சிறுநீர் கழிப்பதால் பரிதவித்து கதறினார் தாய். அவனுக்கு கால்சட்டையை மாட்டுவதற்கும், இடத்தில் நிற்க வைப்பதற்கும் பெரும் சிரமப்பட்டார்.
‘இந்தப் பையனை என்னால் ஒரு நிமிஷம் கூட வச்சிருக்க முடியாது. கலெக்டர் இவனை கருணைக் கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று ஆற்றாமையுடன் தொடர்ந்து கதறினார்.
அவர் கூறியது:
எனக்கு இரண்டு பிள்ளைகள். இவன் 2-வது பையன். என் கணவர் 13 வருடத்துக்கு முன்பே இறந்துவிட்டார். இவனுக்கு 5 வயதிருக்கும்போது கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அதிலிருந்து உயிர் பிழைத்தவன், மனநிலை பாதிக்கப்பட்டவன் ஆகிவிட்டான். எதைக் கையில் கிடைத்தாலும் எடுத்து அடிப்பான். வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து விடுவான். ஓயாமல் எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பான். ஒரே சமயத்தில் 15 தோசையானாலும் சாப்பிட்டு விடுவான்.
இவன் முன்னால் யாரும் சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. அதை பிடுங்கி சாப்பிட்டு விடுவான். சத்தம் போட்டால் ஊரே கேட்கும். அக்கம் பக்கத்தினர் அரளுவார்கள். தொடர்ந்து மருத்துவம் பார்க்கிறோம். இன்னெய்க்கு குணம் ஆகும்; நாளைக்கு குணம் ஆகும்ன்னு நம்பிக்கையோட செஞ்சிட்டே இருந்தோம். எதுவும் நடக்கலை. மயிலாடுதுறை அனாதைகள் காப்பகம், பொள்ளாச்சி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம் என பல இடங்களில் விட்டும் பார்த்துவிட்டோம். யாருமே 10 நாள், 15 நாட்களுக்கு மேல் வைக்க முடியவில்லை. கடைசியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் ஒரே ரகளை. 2 மாசத்துக்கு மேல அவங்களாலும் வைக்க முடியலை.
தினசரி 19 மாத்திரைகள் கொடுப்போம். அதில் 2 மாத்திரைகள் ராத்திரி தூங்கறதுக்கு. எல்லாமே ஹெவி டோஸ்ன்னு டாக்டர்கள் சொல்லியே தருவாங்க.
அப்படியும் அவன் காலையில 4 மணிக்கோ 5 மணிக்கோ எழுந்திருச்சிடுவான். அப்புறம் ஒரே சத்தம்தான். எழுந்ததிலிருந்து அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்திட்டே இருக்கணும். அப்படியும் வெளியில ஓடிடுவான். துணியில்லாம திரிவான். பிடிச்சி இழுத்திட்டு வரணும். ஒரு தடவை ஒரு பொம்பளையோட கம்மலை பிடுங்கி எங்கேயோ வீசிட்டான். அதுக்காக புதுக் கம்மல் விலை கொடுத்து வாங்கிக் கொடுத்தேன். 2 நாட்களுக்கு முன்பு கூட ஒரு ஆட்டோவில் வைப்பரை பிடுங்கி எறிந்துவிட்டான். அதை சரிசெய்து தரவேண்டியதாகி விட்டது.
இப்படி இவனால் தினம் தினம் கொடுமைதான். ஒவ்வொரு நாளும் ராத்திரி தூங்கும்போது காலையில் ஏண்டா பொழுது விடியுதுன்னு துடிச்சிட்டு இருக்கேன். இவனால் சித்ரவதை படறதுக்கு அதிகாரிகள் கருணைக் கொலை செய்யட்டும். சில சமயம் நானே இவனை கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிடலாம்ன்னு தோணும்.
ஆனாலும் மனசு கேட்காது. எம் பெரிய பையன் கூலி வேலைக்குப் போறான். வீடு வாடகைக்கு தரமாட்டேங்கறாங்க. இருக்கிற வாடகை வீட்லயும் இவனால காலி பண்ணச் சொல்றாங்க. இப்ப மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. என்ன செய்யறதுன்னே தெரியலை’ என்று கூறினார் மணிமேகலை.
நேற்று மதியம் 2 மணி நேரத்துக்கும் மேல் இவரது கதறலை ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்த பொதுமக்கள் அனுதாபத்தோடு பார்த்துச் சென்றனர்.
மணிமேகலையின் தந்தை ராஜகோபால் கூறும்போது, ‘என் மகள் வதைபட்டு வரும் கொடுமையால் கருணைக் கொலை செய்யுங்கன்னு பேசறாங்க. அப்படி எதுவும் செய்ய வேண்டாம்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இரண்டரை மாசம் இருந்தான். அப்படி அங்கேயே இவனை வச்சுட்டா போதும், பத்திரமா இருப்பான். அதுக்கு அதிகாரிக ஏதாவது செய்யணும்’ என்றார்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம், ‘என் மகனைக் கருணைக் கொலை செய்யுங்கள், அல்லது கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்த்திடுங்கள்’ என மனு அளித்துவிட்டுச் சென்றனர்.