உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்பு தீண்டி உயிரிழப்பதாக உலக வன உயிரின வார விழாவில் வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மனிதரைக் கண்டால் அஞ்சி ஓடுபவைதான் பாம்புகள். தொல்லைப்படுத்தினாலோ, காயப்படுத்தினாலோ மட்டுமே தன்னை காப்பாற்றிக் கொள்ள அவை மனிதனைத் தீண்டுகின்றன. பாம்புகள் மனிதனை இரையாக உண்பவை அல்ல. பாம்பை நினைத்தாலே உயிர் பயத்தில் நாம் பீதியடைகிறோம்.
பார்த்தவுடனேயே அதை கூட்டமாகக் கூடி அடித்துக் கொல்லத் துடிக்கிறோம். பாம்பு என்றாலே பயம் என்று சொல்லியே தலைமுறை தலைமுறையாக கற்பித்து வருகிறோம். இதன்மூலம் குழந்தைகளுக்கு மட்டுமன்றி நாம்கூட பாம்பின் குணநலன், அவற்றின் இயல்புகளை அறிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டோம்.
பாம்பின் வாழ்நாள் 30 ஆண்டுகள்
உலக வன உயிரின வார விழா கொண்டாடும் இந்த நேரத்தில் பாம்பு பற்றிய பல அரிய தகவல்களை கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ‘தி இந்து’-விடம் கூறியது:
பாம்புகள் உருவாகி சுமார் 15 கோடி ஆண்டுகள் ஆகின்றன. உலகில் 3,000 வகை பாம்பு இனங்கள் உள்ளன. இந்தியாவில் கருநாகம், நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கடல் பாம்பு, பச்சை பாம்பு உள்ளிட்ட 270 வகை பாம்புகள் உள்ளன. இதில் 4 வகை பாம்பு மட்டுமே நஞ்சுள்ளவை. பாம்புகள் பொதுவாக பெருச்சாளிகள், எலிகள், பல்லிகள், தவளைகள், சிறிய பறவைகள் மற்றும் பூச்சிகளை உண்ணும். சில பெரிய பாம்புகள், சில சிறிய பாம்புகளை உண்ணும். ஆனால், முட்டையை உண்ணாது.
இந்தியாவில் கடும் நஞ்சுள்ள பாம்பு கட்டு விரியன். உலகில் அதிக நஞ்சுள்ள பாம்பு ஆஸ்திரேலியாவின் புலிப்பாம்பு. சராசரியாக பாம்புகள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வாழும். அரிதாக, 30 ஆண்டுகள் வரை வாழலாம்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு
பாம்புகள் அவற்றின் தோலுக்காகவும், நஞ்சுக்காகவும் கொல்லப்படுகின்றன. பாம்புகளின் நஞ்சைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மருந்துகள், புற்றுநோய், இதய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. காடுகள், புல்வெளிகள், பாலை நிலங்கள், ஆறுகள், கடல்கள், என பல வாழ்விடங்களில் பாம்புகள் வாழ்கின்றன. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் பாம்பு தீண்டி பாதிக்கப்படுகின்றனர். அதில், ஒரு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பாம்பு தீண்டி உயிரிழப்பு நேரிடுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றார்.