திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்ட தாய்ப்பால் வங்கிக்கு 361 தாய்மார்கள் தாய்ப் பாலை வழங்கியதன் மூலம், இது வரை 543 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தாய்ப்பால் வங்கி செயல்பட்டுவந்த நிலையில், திண்டுக்கல் உட்பட 10 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகளைத் தொடங்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரியில் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. தாய்ப்பால் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, இந்த வங்கியில் சேமித்து வைக்கப் படும் தாய்ப்பால் வழங்கப்பட்டு குழந்தைகளின் நலன் காக்கப் படுகிறது.
கடந்த ஜனவரியில் தொடங்கிய போது இதுகுறித்து தாய்மார்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், அந்த மாதத்தில் 10 பேர் மட்டுமே வங்கியில் தாய்ப்பால் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து, அரசு மருத்துவமனை செவிலியர்கள் தாய்ப்பால் வங்கி குறித்தும், இதனால் குழந்தைகள் பயன்பெறு வது பற்றியும் எடுத்துக் கூறியதை யடுத்து தாய்மார்கள் பலர் தாமாக முன்வந்து தாய்ப்பாலை கொடுத்து வருகின்றனர்.
பிப்ரவரியில் 101 தாய்மார்க ளும், அதிகபட்சமாக மே மாதம் 128 தாய்மார்களும் தாய்ப்பாலை வங்கியில் சேமிக்க கொடுத்துள் ளனர். தாய்ப்பால் வங்கி தொடங்கி ஏழு மாதத்தில், இதுவரை 361 தாய்மார்கள் 38,435 மில்லிலிட்டர் தாய்ப்பாலை கொடுத்துள்ளனர். இதைக்கொண்டு அதிகம் பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தை களுக்கு சேமிக்கப்படும் தாய்ப்பால் வழங்கப்பட்டு குழந்தைகள் நலன் காக்கப்பட்டுள்ளது.
இதுபோல, மொத்தம் 543 குழந்தைகள் வங்கியில் இருந்து தாய்ப்பாலை பெற்று பயனடைந் துள்ளனர். தாய்மார்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பால், முதலில் கல்சர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் சேமிக்கப் படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் எம். பாலசுப்பிரமணியன் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:
தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாய்ப்பால் வார விழா இன்று முதல் ஒரு வாரம் கொண்டாடப்பட உள்ளது. ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதன்பிறகு, தாய்ப்பாலுடன் இணை உணவு வழங்கலாம் என்பது குறித்து, தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கியில் 1260 மில்லிலிட்டர் தாய்ப்பால் இருப்பு உள்ளது என்றார்.