தமிழகம்

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்த புள்ளிவிவரம் சேகரிப்பு: தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும்படி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்க திமுக திட்டம்?

டி.எல்.சஞ்சீவி குமார்

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை காரணமாக வைத்து ஆட்சியை கலைக்கும்படி தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் மனு கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களில் தமிழகம் முழு வதும் நடந்த போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டத்தை கட்சித் தலைமை கூட்டியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமை யில் இன்று கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் கடந்த 27-ம் தேதி முதல் நடந்த சம்பவங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த புள்ளிவிவரங்களுடன் வரும்படி கட்சித் தலைமை உத்தரவிட் டுள்ளது. முடிந்தவரை கூட்டத்துக்கு முன்னதாகவே இந்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் திமுக நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகத்தில் அரசியல் சட்டப்படி எதுவும் நடக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து விட்டதால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரிடம் மனு கொடுக்க உள்ளோம். ஜெயலலிதா சிறை யில் அடைக்கப்பட்டபோது, கருணாநிதி, ஸ்டாலின் அமைதியாகத்தான் இருந் தனர். அதிமுகவினர்தான் அவர்கள் வீட்டில் தாக்குதல் நடத்தினர். ஆனால், தேவை இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்” என்றனர்.

இதற்கிடையே, தமிழக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை திரட்டவும் திமுக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே வைகோ வீட்டுக்கு அருகில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்ததை கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

தமிழக அரசுக்கு எதிரான மனநிலை யில் இருக்கும் தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக ஆகிய கட்சிகளையும் ஒருங்கிணைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரி கிறது.

SCROLL FOR NEXT