தமிழகம்

6 மாதங்களில் 24 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: அரசு ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

செய்திப்பிரிவு

கடந்த 6 மாதங்களில் 24 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து அரசு ஸ்டான்லி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் 24 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மூளைச்சாவு அடைந் தவரிடம் இருந்து சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு மட்டும் 10 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன.

இந்நிலையில் மூளைச்சாவு அடைந்தவர்கள் மூலமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் நேற்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து டீன் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், ஆர்எம்ஓ டாக்டர் ரமேஷ் ஆகியோரை சந்தித்தனர். தங்களுக்கு சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்த சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர் எம்.எட்வின் பெர்னாண்டோ, சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் டி.ராஜாராமன் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினரை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு டீன் உள்ளிட்ட டாக்டர்கள் அறிவுரை வழங்கினர்.

இதுதொடர்பாக டாக்டர்கள் எம்.எட்வின் பெர்னாண்டோ மற்றும் டி.ராஜாராமன் ஆகியோர் கூறியதாவது:

அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் 1986-ம் ஆண்டு முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் சிறுநீரகம் மாற்று அறுவைச் சிகிச்சை 1996-ம் ஆண்டு தொடங்கியது. இதுவரை 731 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. இதில் உறவினர்கள் மூலமாக பெறப்பட்டு 621 அறுவைச் சிகிச்சைகளும், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டு 110 அறுவைச் சிகிச்சைகளும் நடந்துள்ளன.

சிறுநீரகவியல், சிறுநீரக அறுவைச் சிகிச்சை, மயக்கவியல் மற்றும் நோய் எதிர்ப்பியல் ஆகிய 4 துறைகளும் ஒருங்கிணைந்து சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை செய்கிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.7 லட்சம் வரை செலவாகும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை இந்த மருத்துவமனையில் முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

          
SCROLL FOR NEXT