பார்த்தீனியம் செடி ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்படும் இந்த தருணத்தில், இந்தியாவில் இந்த செடிகள் 2 மில்லியன் ஹெக்டேர் விளை நிலத்தில் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், தேசிய அளவில் தீமை விளைவிக்கும் செடியாக பார்த்தீனியம் கருதப்படுகிறது.
தற்போது விவசாய நிலங்கள், சாலைகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பார்த்தீனியம் களைச்செடிகள் வேகமாக பரவி வருகின்றன. நச்சுத்தன்மை, அதிக விதை உற்பத்தித் திறன், மற்ற தாவரங்களை வளர விடாமல் தடுக்கும் தன்மை போன்ற காரணங்களால் இந்த களைச்செடிகள் தற்போது தேசிய அளவில் தீமை விளைவிக்கும் நச்சுச் செடியாகக் கருதப்படுகிறது. இதில் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் பல்வேறுவித நோய்களை பரப்பும் பார்த்தீரின், ஹிஸ்டிரின், ஹைமினின் மற்றும் அம்புரோசின் போன்ற நச்சுக்கள் இருக்கின்றன. விளைநிலங்களையும், வளி மண்டலத்தையும் பெரிதும் மாசுப் படுத்தி கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு விளை விக்கின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமில்லாமல் அவ்வினமே அழிவதற்கு முக்கிய காரணமாக இந்த செடிகள் திகழ்கின்றன. அதனால், இந்த களைச்செடிகளை ஒழிப்பதற்காக தமிழக அரசு உத்தரவின்பேரில் வேளாண்மை துறை சார்பில் நேற்று (ஆக. 16) தேதி முதல் ஆக. 21 வரை பார்த்தீனியம் செடி ஒழிப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சே.கனகராஜ் கூறியது: பார்த்தீனியம் விஷச்செடி, பார்த்தீனியம் ஹிஸ்டிரோபோரஸ் என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட ஆஸ்டிரேஸி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த நச்சு தாவரம் 1954-ம் ஆண்டு வளர்ந்து வரும் நாடுகளில் பட்டினி மற்றும் சத்துக் குறைபாடு பிணியை நீக்க (Public Law 480) சட்டப்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையுடன் இந்தியாவுக்குள் ஊடுருவி வந்ததாகக் கூறப்படுகிறது. 2009-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு வரை பார்த்தீனியம் நச்சுச் செடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.
இந்த களையானது கால்நடை தீவனங்களையும், பயிர்களையும் வளர விடாமல் தடுத்து வேகமாக பரவி மேய்ச்சல் நிலம் மற்றும் விளைச்சல் நிலையங்களையும் பாதிக்கிறது. ஒரு செடியானது ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 வரை நல்ல முளைப்புத்திறன் கொண்ட வீரிய விதைகளை உற்பத்தி செய்கிறது என்றார்.