அரசியல் இயக்கங்களிலே தே.மு.தி.க.வில் மட்டும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அமைப்பை உருவாக்கி, அவர்களும் அரசியலில் சம உரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மாற்றுத் திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் டிசம்பர் 3–ம் தேதி (நாளை) அனுசரிக்கப்படுகிறது. உடல் உறுப்புகளில் குறைபாடுகள் கொண்டு சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் வாழ்ந்து வருகின்ற மாற்றுத் திறனாளிகள் மீது அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் நம்மில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகத்தான் உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அவர்களின் துன்பங்கள் நீங்கி எல்லா வளமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்த காலந்தொட்டு மாற்றுத் திறனாளிகள் மீது தனி அக்கறையும், கவனமும் செலுத்தி வந்தேன். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், தையல் இயந்திரங்களும், காது கேளாதோருக்கு, காது கேட்கும் கருவிகளும், நடப்பதற்கு உரிய ஊன்றுகோல்களும், செயற்கை மாற்று உறுப்புகளும், கண் பார்வையற்றோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் ஆகியோருக்கு தேவையான உபகரணங்களும் வழங்கி வந்துள்ளேன்.
அரசியல் இயக்கங்களிலே தே.மு.தி.க.வில் மட்டும் தான் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அமைப்பை உருவாக்கி, அவர்களும் அரசியலில் சம உரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாம் அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதன் மூலம், அவர்களும் சமூகத்தில் சுய மரியாதையோடும், கெளரவத்தோடும் வாழும் நிலையை அடைவார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் எனது பிறந்த நாளில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு ரூபாய் 65 லட்சம் மதிப்பில், நான்கு சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கினேன். இதுபோன்று செய்யக்கூடிய உதவிகள் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், நிரந்தரமாக அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளாதார உதவிகள் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் அரசுத்ப்துறையில் வேலை வாய்ப்பை அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு உரிமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சமுதாயத்தில் உள்ள நாம் அனைவரும் நம்முடைய சக்திக்கேற்றவாறு உதவி செய்வதை நம்முடைய லட்சியமாக கொள்ள வேண்டும். இந்த உணர்வினை பொதுமக்கள் அனைவருக்கும் உண்டாக்குவதே இந்த உன்னத நாளின் குறிக்கோள் ஆகும். ஆகவே மாற்றுத் திறனாளிகளும் நம்மைப் போலவே வாழ்வதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்குவோம் என்ற சூளுரையோடு எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.