தமிழகம்

உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் மெரினா கடற்கரை சாலையிலேயே சிவாஜி சிலை இருக்கலாம்: வாகை சந்திரசேகருக்கு முதல்வர் பதில்

செய்திப்பிரிவு

சென்னை மெரினா சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை, மணிமண்டபம் கட்டி முடித் ததும், அங்கு மாற்ற திட்ட மிடப்பட்டுள்ளது. உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து, அனுமதி பெற்றால், மெரினாவில் தற்போது உள்ள இடத்திலேயே சிலை இருக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் வாகை சந்திரசேகர், ‘‘தனது நடிப்பால் தமிழுக்கு பெருமை சேர்த்த நடிகர் சிவாஜியின் சிலை சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ளது. தற்போது உள்ள இடத்திலேயே அந்த சிலை தொடர்ந்து இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

அரசின் விருப்பம் அல்ல

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை இப்போது இருக்கும் இடத்தில் இருந்து மாற்றவேண்டும் என்பது அரசின் விருப்பம் அல்ல; அது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு. ‘இன்னும் ஏன் சிலையை அகற்றவில்லை?’ என உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும் என ஏற்கெனவே அறிவித்துள்ளோம். அதை கட்டி முடிக்கும்போது, சிலை அங்கு மாற்றப்படும். இதை சொல்லிதான் உயர் நீதிமன்றத்தை சமாதானப்படுத்தி இருக்கிறோம்.

வாகை சந்திரசேகருக்கு திரைப்படத் துறை, நடிப்பு பற்றி தெரிந்த அளவுக்கு சட்டத்தைப் பற்றி தெரியவில்லை என நினைக்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு போட்டு சிவாஜி சிலையை அங்கேயே நீட்டிக்க அனுமதி பெற்றால், அதை செய்ய நாங்கள் தயார்.

திமுக ஆட்சியில் 2006 ஜூலை 21-ம் தேதி சிவாஜி கணேசன் சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதை எதிர்த்து சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2006 ஜூலை 19-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தெளிவுரை மனு தாக்கல் செய்வதாக கூறி அவகாசம் கோரினார். அதன்படி தெளிவுரை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இதற்கான தெளிவுரையை வழங்க வில்லை. உச்ச நீதிமன்றத்தில் தெளிவுரையைப் பெறவோ, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை அரசுக்கு சாதகமாக முடிக்கவோ திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

SCROLL FOR NEXT