தமிழகம்

அரசு மருத்துவக் கல்லூரியில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

செய்திப்பிரிவு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிறுநீர்ப்பை நோய்த் தொற்று சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சீறுநீர்ப்பை நோய் தொற்று மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார். இதற்காக தொடர் மருத்து வச் சிகிச்சை எடுத்து கொள்கிறார்.

அதன்படி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி மூட்டு வலிக்காக சிகிச்சை எடுத்து கொண்டார். மேலும், சிறுநீர்ப்பை நோய்த் தொற்று சிகிச்சைக்காக அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர், அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதற்காகவும் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆலோ சனைக்காகவும் பேரறிவாளனை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 10 மணி அளவில் பேரறிவாளனை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். சிறுநீரகத் துறையில் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், 11 மணி அளவில் பேரறிவாளன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT