தமிழகம்

ஏ.சி. மெஷின் தீப்பிடித்த விபத்தில் பாஜக பிரமுகர் காந்திராஜ் மூச்சுத் திணறி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஏ.சி மெஷின் தீப்பிடித்த விபத்தில் பாஜக பிரமுகர் மூச்சுத் திணறியும், தீக்காயம் அடைந்தும் உயிரிழந்தார்.

வில்லிவாக்கம் அகத்தியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காந்திராஜ்(46). இவர் பாஜகவின் விவசாய அணியில் மாவட்ட துணைத் தலைவராக இருந்துள் ளார். வீட்டின் முதல் தளத்தில் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் தனி அறையில் ஏ.சி. போட்டுகொண்டு தூங்கியுள்ளார். நேற்று காலை அவரது அறை ஏ.சி. மெஷினில் இருந்து திடீரென புகை கிளம்பி நெருப்பாக மாறியுள்ளது.

இதனால், காந்திராஜுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் பயத்தில் கூச்சலிட்டுள்ளார். இதைத் கேட்டு அவரது மனைவியும் சத்தமிட்டுள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காந்திராஜ் உடலில் தீக்காயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தீயணைப்பு வீரர் களும் விரைந்து சென்று அறையில் பரவிய தீயை அணைத்தனர்.

இதற்கிடையில், காயம் அடைந்த காந்திராஜ் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT